பணத்துக்காக தத்து எடுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்: வழக்கில் முக்கிய திருப்பம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய சிறுவன் ஒருவனை தத்தெடுத்த லண்டன் தம்பதியினர், பணத்துக்காக அவனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்த பிரித்தானியா மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு லண்டனில் வசிக்கும் ஆர்த்தி தீர் (55), அவரது கணவர் கவல் ரைஜதா (30) இருவரும் இந்தியாவுக்கு சென்று கோபால் செஜானி (11) என்ற சிறுவனை தத்தெடுத்துள்ளனர்.

ஒரு பக்கம் அவனது உறவினர்கள் அவனை தத்து கொடுப்பதற்கான ஆவணங்களை தயார் செய்யும் நடவடிக்கைகளில் இறங்க, அந்த நேரத்தில், ஆர்த்தி, கோபால் பெயரில் 150,000 பவுண்டுகளுக்கு காப்பீடு எடுத்துள்ளார்.

கோபால் இறந்தாலோ, அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகோ பெருந்தொகை ஒன்று ஆர்த்திக்கு கிடைக்கும்.

google

அதற்காக 15,000 பவுண்டுகள் வீதம், இரண்டு பிரீமியம் கட்டணங்களும் செலுத்தி உள்ளார் ஆர்த்தி.

பின்னர் ஆர்த்தியும் அவரது கணவரும் லண்டன் திரும்ப, இந்தியாவில், கோபாலையும் அவரது சகோதரி கணவரான கர்தானி என்பவரையும் சிலர் கத்தியால் குத்தி சாலையோரம் போட்டுவிட்டு சென்றிருக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சில நாட்களுக்குப்பின் உயிரிழந்திருக்கிறார்கள்.

சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஆர்த்தி தம்பதியின் நண்பர் என்பதும், அவர் சில காலம் ஆர்த்தி குடும்பத்துடன் லண்டனில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

எனவே, ஆர்த்தி மற்றும் அவரது கணவர் மீது கொலை மற்றும் கடத்தலுக்கான சதித்திட்டம் தீட்டியது உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டன.

அவர்கள் இருவரும் இந்திய அரசின் கோரிக்கையின் பேரில், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டனர்.

என்றாலும் அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது.

இரட்டைக்கொலைக்கான தண்டனை இந்தியாவில் ஜாமீன் இல்லாத ஆயுள் தண்டனை என்பதால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை நாடு கடத்துவது பிரித்தானிய சட்டப்படி அவர்களுடைய மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி, அவர்களை நாடு கடத்துவதற்கு உடன்பட மறுத்துவிட்டார் நீதிபதி.

இந்நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக, ஆர்த்தி தம்பதியரை நாடு கடத்துவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுள்ளதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு, நேற்று இந்திய அரசுக்கு பிரித்தானிய உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அத்துடன் ஜனவரி மாதம் 28ஆம் திகதி மேல் முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா சார்பில் நாடுகடத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் Crown Prosecution Service என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்