Brexit... காலக்கெடுவை நீட்டிக்க எம்.பி.க்கள் வாக்களிப்பு: பிரதமர் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நான்காவது முறையாக எம்.பி.க்கள் Brexit காலக்கெடுவை நீட்டிக்க கோரி வாக்களித்துள்ளனர்.

ஆனால் தாம் இனிமேல் காலக்கெடுவை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ நிச்சயம் அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் பிரித்தானியா வெளியேறும் என போரிஸ் ஜான்சன் உறுதி அளித்து, அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார். அவரது முயற்சியில் அடுத்தடுத்து சறுக்கல் ஏற்பட்டு வருகிறது.

விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று 37 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதன்முறையாக கூடிய பாராளுமன்ற பொதுச்சபையில் புதிய உடன்படிக்கை தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுமார் 5 மணி நேரம் விவாதித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமீபத்தில் போரிஸ் ஜான்சன் செய்துள்ள புதிய உடன்படிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதால் வெளியேறும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்னும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இதன்மீது எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

322 எம்.பி.க்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாகவும் 306 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில் லெட்வின் சட்டத்திருத்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சட்டமாக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்துமாறு ஐரோப்பிய யூனியனை நான் வலியுறுத்த மாட்டேன் என பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers