அக்டோபர் 31 அன்று பிரெக்சிட் இல்லை: திணறும் பிரித்தானிய பிரதமர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரதமர் பதவிக்கான பிரச்சாரத்தில் போரிஸ் ஜான்சன் முன் வைத்த முக்கிய வாக்குறுதி, அக்டோபர் 31 அன்று பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே கொண்டுவருவேன் என்பதுதான்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2016ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்பில் வாக்களித்த மக்களும், போரிஸ் ஜான்சன் தாங்கள் விரும்பியதுபோலவே அக்டோபர் 31 அன்று பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறச் செய்துவிடுவார் என்று நம்பித்தான் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால் அவரால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஒவ்வொரு பிரச்னையில் அவர் சிக்கும்போதும் அதைச் சொல்லி அவரை பிரதமராக விடாமல் தடுக்க முயன்ற போட்டியாளர்களின் கனவு பலிக்காமல், எல்லா தடைகளையும் தாண்டி மக்கள் அவரை பிரதமராக்கினார்கள்.

ஆனால், அவர் பிரதமரான பின்னும் அவரை செயல்பட விடாமல் தடுக்கிறார்கள் அவரது போட்டியாளர்கள்.

பிரெக்சிட்டை நிறைவேற்ற தடுமாறிய ஜான்சன், தற்போது அதை கிடப்பில் போட்டுவிட்டு, முன் கூட்டியே தேர்தல் நடத்துவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால், அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

மூன்று முறை தேர்தல் நடத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் அவரை தோற்கடித்துவிட்ட நிலையில், தற்போது நான்காவது முறையாக டிசம்பர் மாதம் 12ஆம் திகதி தேர்தல் நடத்தும் திட்டம் தொடர்பான மசோதா ஒன்றை முன்வைக்க இருக்கிறார் ஜான்சன்.

ஆனால் எதிர்க்கட்சிகள் டிசம்பர் 9 அன்று தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று விரும்புகின்றன. அதற்கு காரணம் என்னவென்றால், தேர்தலுக்கு 25 வேலை நாட்களுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் டிசம்பர் 9 அன்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிடும், ஜான்சனால் தனது பிரெக்சிட் தொடர்பான ஒப்பந்தத்தை கொண்டுவரமுடியாமலே போய்விடும் என்பதாலேயே எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றாலும், ஒன்று மட்டும் உறுதி, பிரெக்சிட் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி இல்லை!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்