இந்திய வம்சாவளியினர் என்பதால் குழந்தையை தத்துக் கொடுக்க மறுத்த அமைப்பு: பிரித்தானியாவில் பரபரப்பு வழக்கு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிறந்த ஒரு தம்பதி, குழந்தை ஒன்றை தத்தெடுக்க விண்ணப்பித்தபோது, அவர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதால் மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் பிறந்த சந்தீப் மற்றும் அவரது மனைவி ரீனா மந்திர் தம்பதி, குழந்தை ஒன்றை தத்தெடுப்பதற்காக Berkshireஇல் விண்ணப்பித்திருந்தார்கள். விண்ணப்பம் தொடர்பான விசாரணையின்போது, தங்கள் பெற்றோர் இந்தியாவில் பிறந்தவர்கள் என்ற தகவலை கொடுத்துள்ளார்கள் அவர்கள்.

பதிலுக்கு, குழந்தைகளை தத்துக்கொடுக்கும் நிறுவனம், தங்களிடம் இந்தியக் குழந்தைகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

எந்த பின்னணியைச் சேர்ந்த குழந்தையானாலும் பரவாயில்லை, தாங்கள் தத்தெடுத்துக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறியபோது, இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ குழந்தை ஒன்றை தத்தெடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

தம்பதி இந்த பிரச்னையை Oxford County நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அவர்கள் Royal Borough of Windsor மற்றும் Maidenhead Council தங்களை நடத்திய விதத்திற்காக இரு அமைப்புகள் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

குழந்தை தத்தெடுக்க முடியாது என்று கூறியதோடு, மந்திர் தம்பதி இந்திய பின்னணி கொண்டவர்கள் என்பதால், குழந்தை தத்தெடுக்கும் தம்பதிகள் என்ற பட்டியலில் கூட இடம்பெற முடியாது என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல வசதியாக வாழும் மந்திர் தம்பதியர் வீட்டில் தாங்கள் தத்தெடுக்கப்போகும் குழந்தைக்காக தனி அறை உட்பட நான்கு உபரி படுக்கை அறைகள் உள்ளன.

ஆக, தத்தெடுக்க சகல வசதிகளும் இருந்தும், இந்திய வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்திற்காக மந்திர் தம்பதியருக்கு குழந்தை தத்துக்கொடுக்க மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் சென்றுள்ள தம்பதி, இது இன அடிப்படையில் நேரடி பாகுபாடு காட்டும் ஒரு வழக்கு என்றும், அது சமத்துவ சட்டம் 2010 மற்றும் மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய கன்வென்ஷனையும் மீறியுள்ளதாகவும் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரித்தானிய குடும்ப நிகழ்வுகளில் கூட, ஒரு கருப்பினத்தவரையும், ஒரு இந்தியரையும், தம்மில் ஒருவர் போலவே காட்டுவதெல்லாம், சினிமாக்களில் மட்டும்தான் போலும்.

தத்துக்கொடுக்கும் நிறுவனத்தில் என்னிடம் கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் எண்ணிப்பார்த்தால், எனது நிறத்தின் அடிப்படையிலேயே எங்கள் விண்ணப்பம் மறுக்கப்பட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது என்கிறார் சந்தீப்.

இன ரீதியில் இந்திய வம்சாவளியினருக்கு குழந்தை தத்துக்கொடுக்க மறுக்கப்பட்டுள்ள வழக்கு பரபரப்பாக தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்