பிரித்தானிய தேர்தல்: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏராளம் வாக்குறுதிகளை அளித்துள்ள கட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரித்தானிய கட்சி ஒன்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏராளமான நல்ல விடயங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.

பிரித்தானியாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவரான Jo Swinson, பிரபல பத்திரிகை ஒன்றில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிரித்தானியாவிலும் இலங்கையிலும் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன செய்வோம் என்பதை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது...

பிரித்தானியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களுக்கு ஆதரவளிக்க லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் உறுதிபூண்டுள்ளோம்.

இலங்கை அரசை கடைசியாக நீதியின் முன் நிறுத்தி 2009ஆம் ஆண்டு நடந்த அராஜகங்களுக்காக கணக்கு கேட்கவேண்டும்.

பிரித்தானியாவிலிருக்கும் தமிழர்கள், நமது சமுதாயத்தை சிறப்படையச் செய்துள்ளார்கள், நாடு முழுவதிலுமுள்ள நமது சமூகத்தில் அவர்கள் பிரிக்க முடியாத முக்கிய பங்காற்றுபவர்கள் ஆவார்கள்.

REUTERS/Peter Nicholls

இலங்கையில் கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதியாகி, அவரது சகோதரரை பிரதமராக்கியுள்ளது, பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழர்களை கவலையடையச் செய்துள்ளது.

நானும் இந்த விடயத்தில் எனது கவலையை தெரிவித்துக்கொள்கிறேன்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இவர்களில் யாரும் கணக்கு கேட்கப்படவில்லை என்பது சர்வதேச சமூக அமைப்பில் ஒரு கறையாகவே இன்னமும் உள்ளது.

பத்தாண்டுகளுக்கு மேல் ஆனாலும், அவரது அரசின் நடவடிக்கைகள் இனப்படுகொலையாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

இலங்கை மக்களிடையே புதிய அரசு ஏற்படுத்திவரும் பிரிவினை, நாட்டின் உண்மையான நீடித்த அமைதியையும் பாதுகாப்பையும் பலவீனப்படுத்தத்தான் செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.

பத்தாண்டுகளுக்குப் பின்பாவது தமிழர்களுக்கு கிடைத்தாகவேண்டிய உண்மையையும் நீதியையும் பெற பிரித்தானியா அதிக உதவி செய்யத்தான் வேண்டும்.

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி, மனித உரிமைகள் உயர் ஆணையரின் பரிந்துரைகளின்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கும்படி இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

எங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் காமல்வெல்த் ஆகிய அமைப்புகளில் உள்ள தாக்கத்தை பயன்படுத்தி, நான் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினரை பாதுகாக்கவும் மனித உரிமைகளை மேம்படுத்தவும் அழுத்தம் கொடுப்பேன்.

brecorder

இலங்கையில் உள்நாட்டுப்போரின்போது, பிரித்தானியா பல மில்லியன் மதிப்புடைய ஆயுதங்களை இலங்கை அரசுக்கு விற்றதை எண்ணி வெட்கம் அடைகிறேன்.

சர்வதேச விதிமுறைகளையும் மனித உரிமைகளையும் மீறும் எந்த நாட்டிற்கும் நாம் ஆயுதங்களை விற்கக்கூடாது.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் மனித உரிமை மீறல்களுக்கு மத்தியிலும் ஆயுதங்களை வியாபாரம் செய்துள்ளார்கள்.

எனவேதான், ஆட்சிக்கு வந்தால் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் மனித உரிமைகள் மீறும் நாடுகள் பட்டியலில் உள்ள எந்த நாட்டுக்கும் ஆயுதங்களை விற்பதை கட்டுப்பாட்டில் வைப்போம்.

இலங்கையிலுள்ள பொதுமக்களுக்கு எதிராக பிரித்தானிய ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாது என்ற உறுதி ஏற்படும்வரை, பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யாது என்பதை இது உறுதி செய்யும்.

பதவியேற்றபின், பிரித்தானியாவின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும்,

2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அராஜகங்களைப்போல் மீண்டும் நடப்பதை தடுப்பதற்காகவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஏராளம் தமிழ்க்குடும்பங்கள், தேவையற்ற கடினமான புகலிட நடைமுறைகளால் அநியாயமான முறையில் பிரிக்கப்பட்டும், புகலிடம் மறுக்கப்பட்டும், விளக்கமளிக்கவும் படாமல் விடப்பட்டும் உள்ளார்கள்.

கன்சர்வேட்டிவ் கட்சியினரின் கொடூரமான, வெறுப்பை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தும் அணுகுமுறையால், தமிழர்கள் உட்பட பலர் பிரித்தானியாவில் வரவேற்கப்படாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இது மாறவேண்டும், தெளிவாகவே சொல்கிறேன், தமிழர்கள் நமது நாடு மற்றும் சமுதாயத்தின் பிரிக்கமுடியாத அம்சம்.

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் மட்டுமே நியாயமான புலம்பெயர்தல் அமைப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் திட்டத்தை வைத்திருக்கும் ஒரே கட்சியினர்.

இந்த வெறுப்பூட்டும் சூழல் கொள்கையை குப்பையில் கடாசிவிட்டு, எங்கள் பொருளாதாரத்துக்கு தங்கள் திறனையும், எங்கள் சமுதாயத்திற்கு தங்கள் பங்களிப்பையும் அளிக்கும் புலம்பெயர்வோரை வரவேற்போம்.

ஊதியத்தின் அடிப்படையில் ஈவிரக்கமின்றி தம்பதிகளைப் பிரிக்கும் spouse மற்றும் partner விசாவுக்கான சிக்கலான குறைந்தபட்ச ஊதியம் போன்ற விடயங்களையும் தூக்கி கடாசி விடுவோம்.

போருக்கும் துன்புறுத்தலுக்கும் தப்பி வரும் மக்களை லிபரல் டெமாக்ரட்ஸ் அரசு பாதுகாக்கும்.

ஆண்டொன்றிற்கு, ஆபத்திலிருக்கும் 10,000 அகதிகளை மறு குடியமர்வு செய்வது எங்கள் திட்டமாகும்.

புகலிடக் கோரிக்கை கொள்கைகளை உள்துறை அலுவலகத்திலிருந்து சர்வதேச மேம்பாட்டுத்துறைக்கு மாற்றுவோம்.

விரைந்து நல்ல முடிவெடுக்கும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்துவோம். சொல்லப்போனால், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த பின், மூன்று மாதங்களுக்கு வேலை செய்யும் உரிமையையும் அளிப்போம்.

இது, அவர்கள் தங்கள் புதிய தாய்நாட்டில் குடியமர்ந்து செழிப்படைய உதவியாக இருக்கும்.

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி, போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், மனித உரிமைகளை மீறுவோருக்கு ஆயுதங்கள் விற்பதை நிறுத்துதல், எங்கள் புகலிட மற்றும் புலம்பெயர்தல் நடைமுறைகளை நியாயமானதாகவும் திறம்பட்டவையாகவும் செய்தல் என்னும் திடமான கொள்கையைக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில், நமது கொள்கைகளால் உயர்ந்து நிற்கும் நாம், பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்.

இவ்வாறு, லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவரான Jo Swinson தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்