லண்டன் பேருந்தில் பயணித்த நபர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர்! சிசிடிவி காட்சியால் சிக்கினார்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் பேருந்தில் யூத சமூகத்தை சேர்ந்தவரை அடித்ததோடு அவரிடம் இனவெறி தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வடகிழக்கு லண்டனில் சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏறிய 48 வயதான நபர் அதில் பயணித்து கொண்டிருந்த சில இளம்பெண்களிடம் மோசமான வார்த்தைகளை பேசியுள்ளார்.

அப்போது அருகில் பிரார்த்தனை தொடர்பான புத்தகத்தை யூத சமூகத்தை சேர்ந்த பயணி படித்து கொண்டிருந்த நிலையில் பெண்களை கிண்டல் செய்த நபரை தட்டிகேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த நபர், தட்டி கேட்ட பயணி முகத்தில் குத்தினார்.

இதோடு யூதவிரோத வார்த்தைகளை பேசி இனவெறியை தூண்டும் வகையில் நடந்து கொண்டார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பயணி பொலிஸ் புகார் அளித்த நிலையில் குற்றவாளியை உடனடியாக பொலிசாரால் பிடிக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்து 48 வயதான குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஆடம் காபூஸ் கூறுகையில், இங்கு யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அமைதியாகவும், எந்த தொந்தரவு இல்லாமலும் வாழ முழு உரிமைகள் உண்டு.

இது போன்ற இனவெறி மற்றும் வெறுப்பு தாக்குதலை யார் எதிர்கொண்டாலும் உடனடியாக எங்களிடம் புகார் அளியுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்