இந்த நாட்டிற்கு இப்போது செல்லப் போகிறீர்களா? பிரித்தானியா மக்களுக்கு அரசு வெளியிட்ட எச்சரிக்கை

Report Print Santhan in பிரித்தானியா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருவதால், பிரித்தானியா மக்களுக்கு அரசு எச்சரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறியும் இரண்டு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது

அதாவது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் இந்த மசோதா உள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ளது என்று எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அஸ்ஸாமில் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 2 பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து, பேருந்து, ரயில் சேவை எனப் பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அஸ்ஸாமில் போராட்டம் அதிகரித்த காரணத்தினால், அங்கு ஒரு சில மாவட்டங்களில் போராட்டங்களை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை அஸ்ஸாம் மக்கள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம்,1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர்.

இதன் காரணமாக அவர்களுக்கு காலப்போக்கில் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

இதனால் அஸ்ஸாமில குடியேறிய வங்கதேச மக்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அப்போதே போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் காரணமாக பிரித்தானியா மற்றும் அமெரிக்க அரசு இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இது போன்ற போராட்டம் நடப்பதால், இந்த எச்சரிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்