சாரதியின் கவனக்குறைவால் பறிபோன இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் உயிர்: சகோதரியின் உருக்கமான வேண்டுகோள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய வம்சாவளியினரான ஒரு இளம்பெண்ணின் உயிர் ஒரு சாரதியின் கவனக்குறைவால் பறிபோன நிலையில், அதே தவறை மற்ற எந்த சாரதியும் செய்யாமல் இருக்கும்படி அந்த இளம்பெண்ணின் சகோதரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய வம்சாவளியினரான Jasjot Singhota (30), பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றிவந்தார்.

சாலை ஒன்றைக் கடக்கும்போது, சரியாக பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கடந்த நிலையிலும், வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Singhotaவுக்கு தலையிலும் உடலுக்குள்ளும் காயங்கள் ஏற்பட்டிருந்ததால், இரத்தக் கசிவு ஏற்பட்டது.

எட்டு மணி நேரம் போராடியும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த நிலையிலும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் Singhota. அவரது உடல் உறுப்புகள் ஐந்துபேருக்கு தானம் செய்யப்பட்டன.

இப்படி வளர்ந்து வரும் ஒரு இளம் மருத்துவர் பரிதாபமாக உயிரிழக்க காரணம் ஒரு சிறு தவறு.

Alexander Fitzgerald (27) என்ற சாரதி, தனது கார் முன் கண்ணாடியில் இருந்த பனியை துடைக்காமல் கார் ஓட்டியதுதான் Singhota உயிரிழக்க ஒரே காரணம்.

கார் கண்ணாடியை சரியாக துடைக்காததால் சாலையைக் கடக்கும் Singhotaவை சரியாக பார்க்க முடியாததால் அவர் மீது Alexanderஇன் கார் மோத பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவர்.

இது நடந்தது 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம். விபத்துக்களை தவிர்ப்பதற்காக கார் புறப்படும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட Singhotaவின் சகோதரியான Neha Santasalo, ஒரு சிறு கவனக் குறைவு தன் சகோதரியின் உயிரைப் பறித்துவிட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.

தன்னால் தன் சகோதரியுடன் செய்ய திட்டமிட்டிருந்த எந்த செயலையும் செய்ய முடியாமல் போய்விட்டதே என வருந்தும் Neha, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியை சுத்தம் செய்து வாகனம் ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Singhotaவின் மரணத்துக்கு காரணமான Alexanderக்கு பத்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி, Alexander தன் வாழ்நாள் முழுவதும், சமுதாயத்துக்கு தொண்டாற்ற விரும்பிய ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டோமே என்ற குற்ற உணர்வுடனேயே வாழவேண்டியதுதான் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...