மகளின் பிறந்தநாளில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் பொலிஸ்: 15 வருடங்களுக்கு பின் சிக்கிய பாகிஸ்தானியர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஷரோன் பெஷெனிவ்ஸ்கியின் வழக்கில் 15 வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான ஷரோன் பெஷெனிவ்ஸ்கி என்கிற பெண் பொலிஸார் நவம்பர் 2005 இல் பிராட்போர்டில் உள்ள ஒரு பயண நிறுவனத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த போது, ஆயுதமேந்திய மூன்று நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த 5,405 பவுண்ட் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் அவருடன் பணியில் இருந்த மற்றொரு பெண் பொலிஸ், தெரசா மில்பர்ன் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மேற்கு யார்க்ஷயர் பொலிஸார், முக்கிய குற்றவாளியான 71 வயதான பிரன் டிட்டா கானை பிடிக்க தீவிர முயற்சி செய்தனர். 2009ம் ஆண்டு அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 20,000 பவுண்ட் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகள் மூன்று பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் இரண்டு குற்றவாளிகள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்ட கான், இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, ஜனவரி 29 ஆம் திகதி ஆஜராகும்படி உத்தரவிட்டதோடு, காவலில் வைக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்