ஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஹரி மற்றும் மேகன் இனிமேல் அரச தலைப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் என மகாராணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் இம்மாத ஆரம்பத்தில், பிரித்தானியா மற்றும் வட அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தை பிரிக்க விரும்புவதாகவும், அதே போல் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்புவதாகவும் அறிவித்தனர்.

ஜனவரி 9 ஆம் திகதி, மேகன் மீண்டும் பிரித்தானியா செல்ல விருப்பம் இல்லாமல் கனடா சென்றார்.

இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் ராணி, இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கான புதிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பக்கிங்காம் அரண்மனையின் அறிக்கை:

"சசெக்ஸ்கள் ( ஹரி மற்றும் மேகன்) தங்கள் HRH ( இளவரசர், இளவரசி) தலைப்புகளைப் பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இனி அரச குடும்பத்தில் பணியாற்றப்போவதில்லை".

அந்த அறிக்கையின்படி, சசெக்ஸ்கள் இனி அரச கடமைகளுக்காக பொது நிதியைப் பெற மாட்டார்கள்.

"ராணியின் ஆசீர்வாதத்துடன், சசெக்ஸ்கள் தங்களது தனிப்பட்ட ஆதரவையும் சங்கங்களையும் தொடர்ந்து பராமரிப்பார்கள்.

அவர்கள் இனி ராணியை முறையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றாலும், சசெக்ஸ்கள் அவர்கள் செய்யும் அனைத்தும் தொடர்ந்து அவரது மாட்சிமை (ராணி) மதிப்புகளை நிலைநிறுத்தும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன".

இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் உத்தியோகபூர்வ இராணுவ நியமனங்கள் உட்பட தங்கள் அரச கடமைகளில் இருந்து விலகுவர்.

"ஹரி மற்றும் மேகன் ஆகியோர், ஃபிராக்மோர் வீட்டை புதுப்பிப்பதற்கான அரச மானிய செலவுகளை திருப்பிச் செலுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர். இது அவர்களின் பிரித்தானிய குடும்ப வீடாகவே இருக்கும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த புதிய அறிக்கையானது 2020 வசந்த காலத்தில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியின் அறிக்கை:

பல மாத உரையாடல்கள் மற்றும் மிக சமீபத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, எனது பேரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் ஆதரவான வழியை நாங்கள் ஒன்றாகக் கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஹரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் என் குடும்பத்தின் மிகவும் விரும்பப்படும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமான ஆய்வின் விளைவாக அவர்கள் அனுபவித்த சவால்களை நான் உணர்கிறேன். மேலும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன்.

இந்த நாடு, காமன்வெல்த் மற்றும் அதற்கு அப்பால் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு பணிகள் அனைத்திற்கும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேகன் இவ்வளவு விரைவாக குடும்பத்தில் ஒருவராக மாறியதில் பெருமைப்படுகிறேன்.

"இன்றைய ஒப்பந்தம் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புதிய வாழ்க்கையை உருவாக்கத் தொடங்குகிறது என்பது எனது முழு குடும்பத்தின் நம்பிக்கையாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்