ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக பிரித்தானியா வெளியேறியது!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

நீண்ட இழுபறிக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா இன்று வெளியேறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற கடந்த 2016 ஆம் ஆண்டு பிரித்தானியா முடிவு எடுத்தது. ஆனால் இந்த பிரெக்ஸிட் நடவடிக்கையானது பிரித்தானியாவுக்கு அவ்வளவு எளிதாக அமையவில்லை.

பிரெக்ஸிட் விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமராக பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சன் பிரெக்ஸிட் நிறைவேற்றுவதில் தீவிர முனைப்பு காட்டினார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

அந்த தேர்தலில் அசுர பலத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சன் அதன் பிறகு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாக்கல் செய்து ஒப்புதலை பெற்றார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்புக்கு முன்னர் நடத்தப்பட்ட விவாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவுக்கு பல்வேறு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதேவேளை, பிரித்தானியாவின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து, வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 உறுப்பினர்களும், எதிராக 49 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பின்னர் பிரித்தானியா இன்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து முறைப்படி வெளியேறுகிறது.

இருப்பினும், பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படாததால், பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் இந்த ஆண்டு இறுதிவரை ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரித்தானியா இணைந்திருக்கும்.

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்