தொடங்கியதா பிரெக்சிட் யுத்தம்?: கடற்பகுதியில் பிரித்தானியா பாதுகாப்பை பலப்படுத்துவதால் பதற்றம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய கடற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய படகுகள் நுழைவதை தடுக்க பிரித்தானியா மூன்று மடங்கு பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளதையடுத்து பிரெக்சிட் யுத்தம் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரித்தானிய வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த நிகழ்வுகளில் ஒன்று, 1976 வரை நீடித்த Cod War என்று அழைக்கப்படும் மீன் பிடித்தலுக்காக நடத்தப்பட்ட யுத்தம்.

பின்னர் 2018இல் பிரித்தானிய படகுகளும் பிரெஞ்சு படகுகளும் மீன் பிடிப்பதற்காக கோபத்துடன் மோதிக்கொண்டபோது அது scallop wars என்றழைக்கப்பட்டது. தற்போது பிரெக்சிட்டைத் தொடர்ந்து அதே போன்றதொரு சூழல் மீண்டும் உருவாகியுள்ளது.

பிரெக்சிட் நிகழ்ந்து transition period முடியும் வரை, ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு உட்படுவதாக பிரித்தானியா தெரிவித்திருந்தது.

அதன் பின் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்பந்தங்களில் மீன்பிடித்தல் உரிமைகள் முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் எந்த நாட்டுக்கும் சந்தேகம் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரித்தானிய கடற்பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சொல்லப்போனால், மீன் பிடிக்க அனுமதித்தால்தான் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் பிரித்தானியா அனுமதிக்கப்படும் என்ற மறைமுக மிரட்டல் கூட விடுக்கப்பட்டாயிற்று.

ஆனால், எப்படி ஐரோப்பிய ஒன்றியம் அடம் பிடிக்கிறதோ அதேபோல் பிரித்தானியாவும், தங்கள் கடற்பகுதியில் மீன் பிடித்தலை அனுமதிப்பது குறித்து தங்கள் அமைச்சர்கள் மட்டும்தான் முடிவெடுப்பார்கள் என்றும், பிரித்தானிய படகுகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அடம் பிடித்து வருகிறது.

அது போதாதென்று, ஏற்கனவே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து பிரான்ஸ் மீனவர்களுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உரசல் தொடங்கிவிட்ட நிலையில், அதை பெரிதுபடுத்துவது போல், இப்போது பிரித்தானியா தனது கடற்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரத்துறை கூடுதலாக இரண்டு கப்பல்களை பாதுகாப்புக்காக கடற்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

மேலும் 22 படகுகள் பாதுகாப்புப் பணிக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளதோடு, மீன் பிடி படகுகளை ஆய்வு செய்வதற்காக 30 அதிகாரிகளும் பணியிலமர்த்தப்பட்டுள்ளார்கள்.

தற்போதைக்கு கடற்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக நான்கு படகுகளும் ஒரு ஹெலிகொப்டரும் இருக்கும் நிலையில் புதிதாக இணைக்கப்படும் படகுகளையும் சேர்த்தால் கடற்படையின் பலம் மூன்றுமடங்காகும் என கூறப்படுகிறது.

இதனால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பிரெக்சிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்