பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்த நிலையில் தாய் தான் அனுபவிக்கும் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 2ம் திகதி ஸ்டீபனி என்ற பெண், காலில் காயம் ஏற்பட்ட 8 மாத மகன் ஜேம்ஸை வொர்திங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பிரித்தானியா பொது சுகாதார அதிகாரிகள் ஸ்டீபனியை போனில் தொடர்பு கொண்டு அவர்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை ஜேம்ஸின் கால் காயத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உடனே அவர்கள் வீட்டிற்கு விரைந்து சென்று தாய்-குழந்தை இருவரையும் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி ஒரு அறையில் வைத்துள்ளனர்.
குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவு நாளை வெளியாகும் என சுகாதார அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனிமையாக இருக்கும் படி ஆலோசனை வழங்கி தாய்-குழந்தை இருவரையும் சுகாதார அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
அன்று முதல் குழந்தை கொரோனா அறிகுறிகளை காட்டுவதாகவும், அவன் கொரோனாவால் இறந்துவிடுவான் என ஒவ்வொரு நொடியும் பயந்து தான் செத்துக்கொண்டிருப்பதாக ஸ்டீபனி துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த தன்னுடைய இன்னொரு குழந்தைக்கும், கணவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என தான் அஞ்சுவதாக கூறியுள்ளார்.
மேலும், மருத்துவர்கள் யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை, உடல்நலம் குறித்து விசாரிக்கவும் இல்லை. குழந்தைக்கு உடல்நிலை மோசமடைந்தால் உடனே தொடர்கொள்ளும் படி சுகாதார அதிகாரிகள் தன்னிடம் கோரியதாக ஸ்டீபனி தெரிவித்துள்ளார்.