அமைச்சர் உட்பட 250 பேருடன் மாநாடு ஒன்றில் பங்கேற்ற சீனப்பெண்ணுக்கு கொரோனா தொற்று: பிரித்தானியாவில் பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட சீனப்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Westminsterஇல் நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளதற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் பேருந்துகள் தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.

அதில் பேருந்துகள் துறை அமைச்சர் Charlotte Vere உட்பட 250 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு சீனப்பெண் மூன்று நாட்களுக்குப் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு, லண்டனிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவருடன் மாநாட்டில் பங்கேற்ற போக்குவரத்துத்துறையினர் நூற்றுக்கணக்கானோருக்கு தங்களுக்கும் வைரஸ் தொற்றியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பெண், சுகாதாரத்துறை அறிவித்ததற்கு மாறாக, மருத்துவமனைக்கு உபேர் டாக்சியில் பயணித்துள்ளார்.

இதனால் எத்தனை பேருக்கு அவரிடமிருந்து நோய் பரவியிருக்கும் என்று தெரியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் இந்த தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு, அரசு மருத்துவமனையின் அவசர உதவிப்பிரிவை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்