இந்திய வம்சாவளியினர் நிதியமைச்சராக பதவியேற்றதும் அதிகரித்த பிரித்தானிய பண மதிப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய வம்சாவளியினர் ஒருவர் பிரித்தானியாவில் நிதி அமைச்சராக பதவியேற்றதும் பண மதிப்பு அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், நிதியமைச்சராக பொறுப்பேற்றதும் பண மதிப்பு அதிகரித்துள்ளதாக, பிரித்தானியாவின், The Guardian, Mail Online ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேன்ஸலராக பதவி வகித்த சஜித் ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக், பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சஜித் ராஜினாமா என்ற செய்தி வெளியானதும் சற்று கீழிறங்கிய ஸ்டெர்லிங்கின் மதிப்பு, ரிஷி பொறுப்பேற்றதும் சரசரவென உயர்ந்தது.

டிசம்பர் தேர்தலுக்குப்பின், இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு யூரோவுக்கு எதிராக பவுண்டின் மதிப்பு உயர்ந்து €1.20ஐ எட்டியுள்ளது.

ரிஷியைப் பொருத்தவரை, அவர் தனது முன்னோடியான சஜித்துடன் நல்ல உறவை வைத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

வெளியாகியுள்ள ட்வீட் ஒன்றில், ரிஷி சஜித்துடன் சினிமா ஒன்றிற்கு சென்றுள்ளதையும், சஜித்தை ’Boss-Jedi Master’ என்று அழைப்பதையும் காணமுடிகிறது.

பதவி உயர்வு பெற்றதும் ரிஷி முதன் முதலாக வெளியிட்டுள்ள ட்வீட்டில், தனது முன்னோடியான சஜித்துக்கு தனது மரியாதையை செலுத்திக் கொண்டுள்ளார். எனது முன்னோடியும், நல்ல நண்பருமான சஜ் கஜானாவில் பதவி வகிக்கும்போது, அருமையாக பணியாற்றியுள்ளார்.

அவருடன் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி, அவர் விட்டுச் சென்ற இந்தப் பணியை, அவரைப்போலவே செவ்வனே செய்வேன் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்