ராயல் என்ற பெயரை பயன்படுத்த ஹரி மேகனுக்கு தடை விதித்த மகாராணியார்: மக்கள் அமோக வரவேற்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ராயல் என்ற பெயரை பயன்படுத்த இளவரசர் ஹரி மேகனுக்கு பிரித்தானிய மகாராணியார் தடை விதித்ததற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

பிரித்தானியாவை விட்டு வெளியேற இளவரசர் ஹரியும் மேகனும் முடிவெடுத்தாலும் எடுத்தார்கள், அவர்கள் மீதான கோபம் மக்களுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற முடிவெடுத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனால் பிரித்தானியா மகாராணியார் மிகவும் மன வருத்தத்திற்குள்ளானார். மக்களுக்கும் இந்த விடயம் எரிச்சலையூட்டியுள்ளது சமீபத்தில் வெளியான சில செய்திகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினாலும், 'Sussex Royal' என்ற பெயரை பயன்படுத்தி பணம் பார்க்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள் ஹரியும் மேகனும்.

அதாவது, இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்ப உறுப்பினர்களாக இருக்கும்போதே, சசெக்ஸ் ராயல் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்திருந்தார்கள்.

அதே பெயரை தங்கள் இணையதளம் ஒன்றிற்கும் சூட்டியதோடு, அதே பெயரில் ஆடைகள், புத்தகங்கள் என பல பொருட்களை வியாபாரம் செய்யும் திட்டமும் வைத்திருந்தார்கள்.

ஆனால், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியபின் அவர்கள் எப்படி ராயல் என்ற பெயரை பயன்படுத்தலாம் என்று பலரும் முறுமுறுக்க ஆரம்பித்தனர்.

இந்த விடயம் மகாராணியார் காதுக்கும் எட்ட, தனது மூத்த அலுவலர்களுடன் இது குறித்து நீண்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அதன்படி, ஹரியும் மேகனும் எந்த விடயத்திலும், அது இணையதளமாக இருந்தாலும் சரி, ஆடை வியாபாரமாக இருந்தாலும் சரி, இனி ராயல் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஹரியும் மேகனும் தங்கள் இணையதளத்தை உருவாக்குவதற்காக பல ஆயிரம் பவுண்டுகள் செலவிட்டுள்ளதால், இது அவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

அத்துடன் அவர்கள் சசெக்ஸ் ராயல் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்க முடிவு செய்திருந்தார்கள். இப்போது எல்லாமே சிக்கலாகிவிட்டது.

இனி, அவர்கள் தங்கள் இணையதளம், வியாபாரம், தொண்டு நிறுவனம் என எல்லாவற்றிற்குமே வேறு பெயரை பதிவு செய்யவேண்டியதுதான்.

அதற்கு மீண்டும் செலவாகும் என்பதோடு, எந்த அளவுக்கு அது மக்களைச் சென்றடையும் என்பதையும் கூற இயலாது.

இது ஒரு பக்கம் இருக்க, மகாராணியார் ராயல் என்ற பெயரை பயன்படுத்த ஹரி மேகனுக்கு தடை விதித்துள்ள விடயம், மக்களை குஷிப்படுத்தியுள்ளது.

பலர் மகாராணியாரின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில், மற்றவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹரி மேகனை கேலியும் கிண்டலும் செய்துவருவதிலிருந்து பிரித்தானியர்கள் எந்த அளவுக்கு ஹரி மேகனின் நடவடிக்கைகளால் வெறுப்படைந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...