தெற்கு லண்டனில் குப்பை லொறியின் பின்புறத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திங்கட்கிழமை காலை 5.35 மணிக்கு தெற்கு லண்டனில் உள்ள Bethwin சாலையில் நின்றிருந்த குப்பை லொறியில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குப்பை லொறியின் பின்புறத்தில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றினார்கள்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வேறு எந்தவொரு தகவலும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் இருந்த லொறி நின்றிருந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் லூக் ஜாக்சன் என்பவர் கூறுகையில், நான் அதிர்ச்சியிலும், திகைப்பிலும் உள்ளேன்.

நான் எப்போதும் இந்த பகுதியை பாதுகாப்பாக உணர்ந்தேன், நாங்கள் பிரதான சாலைக்கு அருகில் இருக்கிறோம்.
இது போன்ற சம்பவம் இங்கு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலின் மேலாளரான அன் மேரி கூறுகையில், காலை உணவுக்காக சில பொருட்களை வாங்க சென்ற போது குப்பை லொறியை சுற்றி பொலிசார் இருப்பதை பார்த்தேன்.

இங்கு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது, நான் இப்பகுதியில் இரவு நேரத்தில் கூட நடந்து செல்வேன், இது பாதுகாப்பான இடமாகவே இருந்திருக்கிறது என கூறியுள்ளார்.
உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்கள் எதையும் பொலிசார் இன்னும் வெளியிடாத நிலையில் அவர் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.