பிரித்தானியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவியேற்ற இந்திய வம்சாவளி பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
566Shares

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், பிரித்தானியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றார்.

பிப்ரவரி 13 ம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கான அட்டர்னி ஜெனரலின் அமைச்சரவை பதவிக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் (39), லண்டனில் உள்ள ராயல் கோர்ட்ஸ் ஆஃப் ஜஸ்டிஸில் பதவியை ஏற்றுக்கொண்டார்.

சுயெல்லா பிராவர்மேன், கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முதல் பெண் அட்டர்னி ஜெனரல் மற்றும் பிரித்தானிய சட்ட வரலாற்றில் நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் ஆவார்.

இதுகுறித்து சுயெல்லா பிராவர்மேன் கூறுகையில், "அட்டர்னி ஜெனரலாக பதவியேற்பது ஒரு பாக்கியம், வரலாற்றில் இரண்டாவது பெண்மணியாக இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதை நான் மதிக்கிறேன்.

"குற்றவியல் நீதி அமைப்பில் நம்பிக்கையை மீட்டெடுப்பதே எனது முதன்மையான இலக்கு. எனக்கு முன்பு இந்த பதவியில் இருந்தவர் செய்த பணிகளுக்கும், அரசாங்கத்திற்கு அவர் செய்த சிறப்பான சேவைக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." எனப்பேசினார்.

பதவியேற்பு விழாவில் நீதித்துறை செயலாளர் ராபர்ட் பக்லேண்ட், தலைமை நீதிபதி இயன் பர்னெட் மற்றும் பார் கவுன்சிலின் தலைவர் அமண்டா பிண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய பூர்விகத்தை கொண்டு கென்யா மற்றும் மொரீஷியஸில் இருந்து குடியேறிய பெற்றோர்களுக்கு லண்டனில் பிறந்தவர் பிராவர்மேன். அவரது இயற்பெயர் சுயெல்லா பெர்னாண்டஸ் ஆகும்.

லண்டனில் உள்ள ஹீத்ஃபீல்ட் பள்ளியில் கல்வி கற்ற அவர் கேம்பிரிட்ஜில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

பிராவர்மேன் ஒரு சட்டத்தரணி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சட்ட பட்டதாரி ஆவார். அவர் பொது சட்டம் மற்றும் நீதித்துறை மறுஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்