கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு விரைந்த பிரித்தானியர்: பலபேருடன் இருமியபடி காத்திருக்க வைத்த கொடுமை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு விரைந்த நபர் அங்கே பொதுமக்கள் பலருடன் இருமியபடி காத்திருக்க வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் வால்சால் பகுதியைச் சேர்ந்த பால் காட்ஃப்ரே என்பவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.

பீதியில் உறைந்த அவர் உடனடியாக 111 என்ற NHS மருத்துவமனை அவசர உதவி இலக்கத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அழைப்பை ஏற்ற அவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல தவறுதலாக அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுவாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், தங்களது குடியிருப்பில் சுய தனிமைப்படுத்தலுக்கு அரசும் சுகாதாரத்துறையும் பரிந்துரைத்துவரும் நிலையில்,பால் காட்ஃப்ரேவை தவறுதலாக மருத்துவமனைக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், மருத்துவமனைக்கு விரைந்த அவரை உடனடியாக கவனிக்காமல், நோயாளிகள் காத்திருக்கும் அறையில் எந்த பாதுகாப்பும் இன்றி காத்திருக்க வைத்துள்ளனர்.

நோயாளிகளால் நிரம்பி வழிந்த அந்த காத்திருக்கும் அறையில் இருமியபடி பால் காட்ஃப்ரே சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்துள்ளார் என்ற தகவல் தற்போது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 82,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,812 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

சுமார் 8,469 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். உலகில் மொத்தம் 50 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்