இந்தியாவில் இருந்திருந்தாலாவது பாதுகாப்பாக இருந்திருக்கும்... பிரித்தானியாவிலிருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலருக்கு, இப்போதுதான் தாய்நாட்டின் அருமை புரிகிறது போலும், இந்தியாவில் இருந்திருந்தாலாவது பாதுகாப்பாக இருந்திருக்குமே என்கிறார்கள்!

பிரித்தானியா உட்பட்ட சில நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Overseas Citizen of India (OCI) அட்டை வைத்திருப்பவர்கள்) இந்தியா திரும்ப தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்திருந்தாலாவது பாதுகாப்பாக இருந்திருக்குமே என்கிறார்கள் அவர்கள்.

கடைசி நேரத்தில் எப்படியோ ஒரு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பிரித்தானியாவிலிருந்து டில்லி திரும்பியுள்ள தாரா சாகல் (19)என்னும் மாணவி, பிரித்தானியாவைக் கரித்துக்கொட்டுகிறார்.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று இன்னும் மோசமாகும் என்று கூறும் தாரா, பிரித்தானியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்கிறார்.

பிரித்தானியா அடுத்த இத்தாலியாகப்போகிறது என்று கூறும் தாரா, வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றாலும் நாங்களும் இந்தியர்கள்தானே, மற்ற இடங்களில் ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்றால், நாங்களும் வீடு திரும்ப வேண்டாமா என்கிறார்.

பிரித்தானியாவில் பயிலும் சில மாணவர்களும் இந்தியாவில் தொழில் செய்பவர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது, ஆனால், பிரித்தானியாவில் எல்லாவற்றையும் கடவுள் கையில் விட்டுவிட்டார்கள் என்கிறார் ஹரேந்திர ஜோதா என்பவர்.

இந்தியாவுக்கு திரும்பிவிட்டவர்கள், தாங்கள் குறைந்த செலவில் சிகிச்சை பெறலாம் மட்டுமின்றி, குடும்பத்தினருடன் இருக்கலாம் என்பதுபோல் உணர்கிறார்கள்.

நடமாடும் ஆய்வகத்துடன் இந்திய விமானப்படை ஈரானுக்கே பறந்து சென்று அங்கிருக்கும் இந்தியர்களுக்கு பரிசோதனை செய்தது என்று இந்தியாவைப் புகழ்ந்து தள்ளும் ஜோதா, அதே நேரத்தில், பிரித்தானியாவில் பரிசோதனைகள் செய்யமுடியாது என்கிறார்.

இதற்கிடையில், நந்தினி சிங் என்ற ஒரு பெண் முதலான சிலர் மட்டும், OCI அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது நல்லதுதான் என்கிறார்கள்.

இந்தியா இன்னொரு இத்தாலியாகவோ, சீனாவாகவோ ஆவதை தாங்கள் விரும்பவில்லை என்கிறார்கள் அவர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்