4,000 படுக்கைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மருத்துவமனை: பிரித்தானியா தீவிரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
985Shares

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 87 பேர் பலியான நிலையில், நிலைமையை சமாளிக்க மேலும் 250,000 தன்னார்வலர்கள் தேவை என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அழைப்பு விடுத்துள்ளார்.

எஞ்சிய ஐரோப்பிய நாடுகளைப் போன்று அல்லாமல் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு நிலை கட்டுக்குள் இருந்தாலும்,

தற்போதைய சூழலில் நிலைமையை சமாளிக்க 250,000 தன்னார்வலர்கள் தேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 422 என அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செய்தி ஊடகங்களை சந்தித்த சுகதார செயலாளர் ஹான்காக்,

அடுத்த ஒரு வாரத்தில் 4,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு என புதிய மருத்துவமனை ஒன்றை செயற்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

NHS Nightingale என பெயரிடப்படவிருக்கும் இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், குறித்த மருத்துவமனையை உருவாக்க ராணுவம் களமிறங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ள முடக்குதல் நடவடிக்கையானது வெறும் கோரிக்கையல்ல, அது ஆணையாகும் எனவும் ஹான்காக் சுட்டிக்காட்டியுள்ளார்.

NHS-ல் பணியாற்றிய ஊழியர்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கை வெற்றிபெற்றுள்ளதாக கூறும் அவர், இதுவரை 11,700 பேர் பணிக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஊழியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஹான்காக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 8,077 பேர் இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 422-ஐ தொட்டுள்ளது.

135 பேர் பூரண குணமடைந்து குடியிருப்புக்கு திரும்பியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்