உங்களால் வீட்டிலுள்ள பொருட்களின் வாசனையை உணர முடிகிறதா?: பிரித்தானிய மருத்துவர்களின் கொரோனா கண்டறியும் முயற்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல பிரித்தானிய மருத்துவர்கள் இருவர், ஒருவரால் தங்கள் வீட்டிலுள்ள பொருட்களின் வாசனையை உணர முடிகிறதா என்பதை வைத்து அவருக்கு கொரோனா உள்ளதா என்பதை கண்டறியும் முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளனர்.

பிரித்தானியாவின் பிரபல மருத்துவர்களான பேராசிரியர் Claire Hopkins மற்றும் பேராசிரியர் நிர்மல் குமார் ஆகியோர், காய்ச்சலை விட, வாசனை அறியும் திறன் இழத்தல்தான் கொரோனா அறிய உதவும் சிறந்த அறிகுறியாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

#CovidSmellTest என்ற ஹேஷ்டேகை உருவாக்கியுள்ள அவர்கள், மக்களை தங்கள் வீட்டிலுள்ள பொருட்களை நுகர்ந்து பார்த்து தங்களால் வாசனையை அறிய முடிகிறதா என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களாக பணியாற்றும் அவர்கள், வாசனையை அறியும் திறன் இழத்தல் (anosmia), கொரோனா அறிகுறிகளில் முக்கியமானதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சொல்லப்போனால், சில கொரோனா நோயாளிகளுக்கு வாசனை இழப்பு மட்டுமே ஒரே அறிகுறியாக இருந்துள்ளது.

பேராசிரியர் குமார் (55) தான் சிகிச்சையளித்த நோயாளிகளில் ப்ளூ காய்ச்சலால் அவதியுற்றோரில் மிஞ்சிப்போனால் ஒருவர் அல்லது இருவர் வாசனையை அறியும் திறன் இழத்தலை ஒரு அறிகுறியாக கூறியிருக்கலாம், ஆனால், கிட்டத்தட்ட அத்தனை கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளும், வாசனையை அறியும் திறன் இழத்தலை ஒரு அறிகுறியாக தெரிவித்தாக தெரிவித்துள்ளார்.

இந்த பேராசிரியர்கள் இருவரும் கொரோனா அறிகுறிகள் கொண்ட 2,500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஆறில் ஒருவர், வாசனையை அறியும் திறன் இழத்தலை மட்டுமே ஒரே அறிகுறியாக குறிப்பிட்டுள்ளதைக் கவனித்துள்ளனர்.

அப்படி வாசனையை அறியும் திறன் இழத்தலை மட்டுமே ஒரே அறிகுறியாக குறிப்பிட்டவர்களில், 74 சதவிகிதத்தினருக்கு ஆய்வக பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் King's College நிபுணர்களும், தங்கள் ஆய்வில், தங்கள் ஆப்பை பயன்படுத்திய இரண்டு மில்லியன் பேரில், கொரோனா பாதித்தவர்களில் 59 சதவிகிதத்தினர் வாசனையை அறியும் திறன் இழத்தலை ஒரு அறிகுறியாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்