இறக்க நேரிட்டால்... பிறக்கவிருக்கும் பிள்ளைக்கு வீடியோ வெளியிட்ட பிரித்தானிய கர்ப்பிணி மருத்துவர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

நிறைமாத கர்ப்பிணியான பிரித்தானிய மருத்துவர் ஒருவர் தாம் கொரோனாவால் இறக்க நேரலாம் என கூறி தமது பிறக்கவிருக்கும் பிள்ளைக்காக உணர்ச்சிமிக்க வீடியோ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் மீனல் விஸ் என்பவரே, பாதுகாப்பு உடைகள் தொடர்பில் போரிஸ் அரசாங்கத்தின் பாராமுகத்தை சுட்டிக்காட்டி,

தமது பிறக்கவிருக்கும் பிள்ளைக்கு உணர்ச்சிமிக்க வீடியோ தகவல் ஒன்றை பதிவு செய்து தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான நோயாளிகளை பராமரிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும்,

போரிஸ் அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட எவையும் போதிய அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனில் பணியாற்றும் மருத்துவர் விஸ் மற்றும் அவரது கணவர் மருத்துவர் நிஷாந்த் ஜோஷி ஆகிய இருவரும் இந்த விவகாரம் தொடர்பில் சட்டத்தின் உதவியை நாடியுள்ளனர்.

நாடு முழுவதும் பணியாற்றும் என்.எச்.எஸ் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள இவர்கள்,

தற்போது சுகாதாரத் துறை மற்றும் இன்கிலாந்து பொது சுகாதார அமைப்பு ஆகியவற்றிற்கு எதிராக புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது 7 மாத கர்ப்பிணியான மருத்துவர் விஸ் குடியிருப்பில் இருந்தே பணியாற்றி வருகிறார்.

தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அன்புள்ள ராதிகா, இன்னும் 63 நாட்களில் இது உனது புதிய குடியிருப்பாக மாறவிருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த இடங்கள், பிரியமான நபர்கள் என அனைத்தையும் உனக்கு நான் அறிமுகம் செய்வேன் என நம்புகிறேன்.

உனக்கு தெரியுமா? நீ மிகவும் இக்கட்டான சூழலில் பிறக்கவிருக்கிறாய், மக்கள் இறக்கிறார்கள், இந்த உலகமே ஒரு போர் சூழலில் இருக்கிறது. முன்வரிசையில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் ஒன்றும் போர் வீரர்கள் அல்ல.

அவர்கள் உனது தந்தை மற்றும் என்னைப் போன்று சாதாரண மக்கள். இந்த மோசமான சூழலில் நான் இறக்க நேரிட்டால், இந்த வீடியோ தகவல் உனக்காக பதிவு செய்துள்ளேன் என முடித்துள்ளார் மருத்துவர் விஸ்.

மட்டுமின்றி அந்த வீடியோ இணைப்பின் கீழே, நமது என்.எச்.எஸ் ஊழியர்கள் உரிய பாதுகாப்பின்றி இறக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசை எதிர்கொள்ள உங்கள் உதவி தேவை என குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஒரு கர்ப்பிணி மருத்துவர் என குறிப்பிட்டுள்ள விஸ், என்.எச்.எஸ் ஊழியர்களுக்காக நாடே ஒன்று திரண்டு கைதட்டுவது நல்லது தான், ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அது போதுமானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்