மர்மம் விலகாத பிரித்தானிய சகோதரிகளின் கொலை... சடலத்துடன் பொலிசார் செய்த மோசமான செயல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

வடக்கு லண்டனில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சகோதரிகளின் சடலத்துடன் செல்ஃபி எடுத்ததாக இரண்டு ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் பிரையன்ட் கன்ட்ரி பூங்காவில் நிக்கோல் ஸ்மால்மேன்(27), மற்றும் பிபா ஹென்றி(46) ஆகியோர் குத்திக் கொல்லப்பட்டனர்.

சுமார் 10 பேர் கொண்ட குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடி இருவரும், ஜூன் 7 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டனர்.

இரண்டு பெண்களின் சடலங்களும் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டன, பிரேத பரிசோதனை மூலம் அவர்கள் இருவரும் பல முறை கத்தியால் தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட காயங்களால் இறந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அந்த சந்தேக நபருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் சடலங்களுக்கு பாதுகாப்புக்காக அனுப்பிய இரு ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகள் அந்த சடலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை தங்களின் நண்பர்கள் உள்ளிட்ட குழுக்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் எதிர்கொண்ட நிலையில், அந்த இரு அதிகாரிகளும் திங்களன்று கைது செய்யப்பட்டு, குற்றவியல் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படங்கள் யார் யார் பெற்றுக்கொண்டார்களோ அவர்கள் தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மேலும் கலக்கமடைய செய்யும் என்பதால் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்