வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியா வருபவர்களுக்கு... தனிமைப்படுத்துவதில் தளர்வுகள்: வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் சில தளர்வுகளை கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விமான சேவை தடை செய்யப்பட்டது.

அதன் பின் இந்த நோயின் தாக்கம் குறைந்து வருவதால், ஒரு சில நாடுகளில் விமான சேவை போன்ற போக்குவரத்துகளில் இருந்த தடை நீக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா தொற்று குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டைத் தளர்த்த பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டில் பரவிவிடக்கூடாது என்பதற்காக, கடந்த 8-ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளும், பிரித்தானிய குடிமக்களுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்ற விதியை அரசு அறிவித்தது.

பயணிகள் விடுதிகளிலோ அல்லது வீடுகளிளோ 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர் சரிவில் இருந்து வருகிற நிலையில் இந்தத் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டால் பிரித்தானியா வருவது பலருக்கும் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பிரித்தானியாவில் சுற்றுலாவுக்கான மாதம் என்பதால் இந்தக் கட்டுபாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டில் தளர்வு கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்துவதாகக் கூறப்பட்டது.

இதில் அயர்லாந்து தவிர்த்து பிற நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் விலக்கு அளிக்க பிரித்தானியா பரிசீலித்து வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்