வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் இந்த நாடுதான்: வெளியாகியுள்ள புதிய தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான்தான் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பிரித்தானிய பத்திரிகையான MailOnline வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியா வந்தவர்கள்தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு கொரோனாவைக் கொண்டுவந்தவர்களில் பாதிபேர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை, அப்படி வந்தவர்கள் 30 பேர் என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து 65,000க்கு அதிகமானவர்கள் பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்றும் The Telegraph என்னும் பிரித்தானிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

நாளொன்றிற்கு பாகிஸ்தானிலிருந்து இரண்டு விமானங்கள் பிரித்தானியா வரும் நிலையில், சில நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியா வந்திறங்கும் சிலர் நேரடியாக மருத்துவமனைகளுக்கே சென்று தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

ஜூன் 22ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து ஹொங்ஹொங் செல்லும் விமானம் ஒன்றில் 30 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து இந்த வாரம் பாகிஸ்தானிலிருந்து வரும் விமான சேவையை துபாய் நிறுத்திவிட்டது.

ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்து பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்கள் பிரித்தானியாவுக்கும் பிரித்தானியாவிலிருந்தும் பறந்தவண்னம் உள்ளன.

முதலில், இரு நாடுகளில் சிக்கியிருக்கும் மற்ற நாட்டவர்களை அவரவர் நாட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்காக துவக்கப்பட்ட இந்த விமான சேவை, பிறகு தொடர்ச்சியாகவே செயல்படத் தொடங்கிவிட்டது.

பாகிஸ்தானில் சுமார் 200,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், சுமார் 4,000 பேர் பலியாகியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான்தான் என தகவல் வெளியானதையடுத்து, அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்