பிரித்தானியாவிற்குள் எப்போது சகஜ நிலைக்கு திரும்பும்? பிரதமர் போரிஸ் சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
874Shares

பிரித்தானியா எப்போது சகஜ நிலைக்கு திரும்பும் என்பது முதலான பல முக்கிய அறிவிப்புகளை போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று, சற்று முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது தொடர்பான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காலம் வருவதற்கு முன், நாடு சகஜ நிலைக்கு திரும்புவதுதான் தனது இலக்கு என அவர் கூறினார்.

இதுவரை வீடுகளில் இருந்து பணியாற்றியவர்கள், ஆகஸ்டு மாதத்திலிருந்து அலுவலகம் திரும்ப உற்சாகப்படுத்தப்படுவார்கள் என்றார் அவர்.

பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது பின்பற்றும் விதத்தில் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் இன்று முதல் முற்றிலும் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், அரசு விளையாட்டு மைதானங்களை இலையுதிர்காலத்தில் மீண்டும் திறக்கும் திட்டத்தில் இருப்பதாகவும், பார்வையாளர்கள் அக்டோபர் முதல் விளையாட்டுக்களை ரசிக்க திரும்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்திற்கு முன் மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதை அனுமதிக்கும் விதத்தில் மீதமுள்ள கட்டுப்பாடுகளையும் மீளாய்வு செய்யும் திட்டம் அரசின் கைவசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கொரோனா தொற்று தொடர்ந்து குறையும்பட்சத்தில் மட்டுமே இந்த மாற்றங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதையும் வலியுறுத்த அவர் தவறவில்லை.

குளிர் காலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள பிரித்தானியா தயாராக இருக்கவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறிய போரிஸ் ஜான்சன், அரசு மருத்துவமனைகளுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கியுள்ளதோடு, உள்ளூர் மட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சர்களுக்கும் கவுன்சில்களுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அக்டோபரிலிருந்து நாளொன்றிற்கு பிரித்தானியாவில் 500,000 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளும் வகையில் வசதிகள் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாம் கொரோனா வைரஸை மேற்கொள்வதைப் பொருத்துத்தான், மேலும் கட்டுப்பாடுகள் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யமுடியும் என்றும் தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்