உள்ளூரில் வாழும் இந்தியர் ஒருவரை வாழ்த்த ஒன்று திரண்ட பிரித்தானியர்கள்: காரணம் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உள்ளூரில் வாழும் இந்தியர் ஒருவரை வாழ்த்துவதற்காக சுமார் 150 பிரித்தானியர்கள் ஒன்று திரண்டனர்.

அவரது பெயர் ராய் கார்பண்டா (62), Southamptonஇன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 38 ஆண்டுகளாக தனது கடையை ஒரு நாள் கூட மூடாமல் நடத்திவந்த ராய் தற்போது ஓய்வுபெற முடிவுசெய்ததையடுத்தே, அப்பகுதி மக்கள் கூடி அவருக்கு பிரியா விடை அளித்தனர்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் மக்கள் அவரது கடை முன் திரண்டு, கரவொலியுடன் உற்சாக ஒலி எழுப்பி அவரை கௌரவிப்பதைக் காணலாம்.

1981ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த ராய், 1982ஆம் ஆண்டு அந்த கடையை பொறுப்பெடுத்துக்கொண்ட நிலையில், 13,416 நாட்கள் தொடர்ந்து அந்த கடையை நடத்தியுள்ளார்.

ராய்க்கு மூன்று பெண் பிள்ளைகள், மீரா (34),நட்டாஷா (33) மற்றும் ஜஸ்டின் (29). மூவரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்காக காலை 8 முதல் இரவு 8 வரை வேலை செய்வார் ராய்.

அவர் ஆசைப்படியே மூத்த மகளை, மருத்துவராகவும், அடுத்த பெண்ணை பொறியாளராகவும் மூன்றாவது பெண்ணை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சட்டத்தரணியாகவும் ஆக்கியும் விட்டார் ராய்.

இனி தன் உதவி அவர்களுக்கு தேவையில்லை என்பதை உணர்ந்து, பணியிலிருந்து விலகி தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளார் ராய்.

இனி கடையை அவரது மருமகள் ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில்தான், ஜூலை மாதம் 16ஆம் திகதி, அவர் ஓய்வு பெறும் நாளான அன்று, இத்தனை நாட்கள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் கடை நடத்திய ராயை கௌரவிப்பதற்காக, அப்பகுதி மக்கள் சுமார் 150 பேர் கூடி அவரை கரவொலி எழுப்பி அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்