கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி: பிரித்தானிய அறிவியலாளர்கள் ஆய்வில் வெளியான தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்தது.

தற்போது, மான்செஸ்டர் அறிவியலாளர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு கேட்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றிலிருந்து கண்டறிந்துள்ளார்கள்.

அந்த ஆய்வில், Wythenshawe மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்த 121 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அவர்கள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட எட்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம், அவர்களது காது கேட்கும் திறனில் ஏதாவது மாற்றம் இருந்ததா என கேட்கும்போது, 13.2 சதவிகிதத்தினர் அவர்களது கேட்கும் திறன் மோசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களில் எட்டு பேருக்கு கேட்கும் திறன் குறைந்து வருவதோடு, மற்ற எட்டு பேருக்கு tinnitus என்னும் பிரச்சினை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, அவர்களுக்கு காதுகளுக்குள் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.

ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் Kevin Munro கூறும்போது, மண்ணன், பொன்னுக்கு வீங்கி மற்றும் மூளை தொற்று ஆகிய தொற்றுக்களின்போது காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்பது ஏற்கனவே அறிந்த விடயம்தான்.

எனவே கொரோனாவிலும் அது சாத்தியம்தான் என்கிறார். அதே நேரத்தில் கொரோனாவுக்கு முன்பே நோயாளிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், மன அழுத்தம், மாஸ்க் அணிவதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சினை, கொரோனா சிகிச்சைக்காக கொடுக்கப்படும் மருந்துகளால் காதுகள் பாதிக்கப்படுதல் என பல்வேறு பிரச்சினைகள் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்.

எனவே, கொரோனா, கேட்கும் திறனில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிவதற்காக, உடனடியாக மேற்கொண்டு இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்வது அவசியமாகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்