ஒரே இரவில் லண்டனை உலுக்கிய 3 கொடூர சம்பவம்: கொரோனாவுக்கு இடையே ரத்தக்களரியான தலைநகரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
4785Shares

தலைநகர் லண்டனில் சில மணி நேர இடைவெளியில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டனில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை மூன்று முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரத்தக்களரியான அந்த இரவில் 5 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

முதலில் பிரிக்ஸ்டனில் இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தொடர்ந்து ஒரு நபர் குரோய்டோனில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இரண்டு பேர் கிழக்கு லண்டனின் ஹாக்னியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அகர்மன் சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்ட தகவல்களுக்குப் பின்னர், இரவு 7 மணிக்கு முன்னதாக மெட்ரோபொலிட்டன் பொலிசார் பிரிக்ஸ்டனுக்கு அழைக்கப்பட்டனர்.

இதில் 17 முறை இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சம்பவயிடத்தில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களின் மிச்சங்களை மட்டுமே பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

மட்டுமின்றி காயமடைந்தவர்கள் அப்பகுதியில் இருந்து மாயமாகியிருந்தனர்.

இதனிடையே, இரண்டு பேர் சிறிது நேரத்திற்குப் பிறகு தெற்கு லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சென்றுள்ளனர். அவர்களின் நிலை தொடர்பில் இன்னும் உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, ஹாக்னியில் இருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருப்பதாக தகவல் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக 30 மற்றும் 31 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், லண்டன் சாலை, குரோய்டனில் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் 20 வயது இளைஞர் ஒருவரை துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகளுக்கு இடையே, லண்டன் நகரம் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு சாட்சியாக மாறத்தொடங்கியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்