பிரித்தானியாவிலேயே அதிக நாட்கள் கொரோனாவால் அவதியுற்ற இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவிலேயே அதிக நாட்கள் கொரோனாவால் அவதியுற்ற பெண், 141 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

பிரித்தானியரான பாத்திமா ப்ரிடில் (35), மொராக்கோவுக்கு சுற்றுலா சென்று திரும்பியநிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

முன்னாள் லேப் டெக்னீசியனான பாத்திமா, பிரித்தானியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டம் முழுவதும் மருத்துவமனையில் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்தார்.

40 நாட்கள் கோமாவிலிருந்த பாத்திமாவின் நுரையீரல்கள் செயலிழந்ததால், அவரை வெண்டிலேட்டரில் வைக்கவேண்டியதாயிற்று. 105 நாட்கள் அவர் வெண்டிலேட்டரில் இருந்தார்.

குணமடைந்து, நேற்று பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த பாத்திமா, பிரித்தானிய அரசு மருத்துவமனைதான் தன்னைக் காப்பாற்றியதாகவும், அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் மெடல் அணிவித்து கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்றும் மனதார பாராட்டினார்.

வெண்டிலேட்டர் ஏற்படுத்திய வலி மிக கொடுமையாக இருந்தது என்று கூறியுள்ள பாத்திமா, ஒரு கட்டத்தில் செத்துப்போனால் நன்றாக இருக்கும் என்று எண்ணியதாகவும் சத்தமாக கத்தலாம் என்று ஆசைப்பட்டால், கத்தக்கூட முடியவில்லை என்றும் தான் அனுபவித்த வேதனையை விவரித்துள்ளார்.

பாத்திமாவின் கணவரான ட்ரேசி (56), ஒரு முன்னாள் ராணுவத்தினர், அவருக்கும் கொரோனா தாக்கியதால், ஐந்து மாதங்களாக கணவனும் மனைவியும் சந்தித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

ஐந்து மாதங்களுக்குப் பின் தன் மனைவியை சந்தித்த ட்ரேசி, அவள் ஒரு மருத்துவ அதிசயம் என்கிறார் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக...

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்