கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பிரித்தானியர்... 5 ஆண்டுகளுக்கு பின்னர் பேஸ்புக் பதிவால் அம்பலமான உண்மை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொலை செய்யப்படலாம் என்று அஞ்சிய ஒரு பண்ணை தொழிலாளி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில் தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ்ஷையரில் ஒரு லீக் பண்ணையில் பணியாற்றி வந்த 35 வயதான ரிக்கார்டாஸ் புய்சிஸ் கடந்த 2015 செப்டம்பர் மாதம் திடீரென்று மாயமானார்.

அவர் மர்மமான முறையில் காணாமல் போனது முழுவீச்சிலான தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க வைத்ததுடன்,

சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு கொலை விசாரணையாகவும் பதிவு செய்யப்பட்டது. மட்டுமின்றி இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ரிக்கார்டாஸைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் உதவியும் நாடப்பட்டும், அதிகாரிகளால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, தொடர்ந்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் நம்பினர்.

இந்த நிலையில் 2019 நவம்பர் மாதம் ரிக்கார்டாஸ் பெயரில் இயங்கும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் அவரது புகைப்படம் ஒன்று பதிவாகியுள்ளது பொலிசாரின் பார்வையில் பட்டுள்ளது.

மட்டுமின்றி, ரிக்கார்டாஸ் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அவரது நட்பு வட்டத்தில் இருந்துள்ளனர்.

இதையடுத்து மீண்டும் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், இறுதியில் 2020 ஜூலை 1 ஆம் திகதி அவர் உயிருடன் இருப்பதை கண்டறிந்தனர்.

லிதுவேனியா நாட்டில் பிறந்தவரான ரிக்கார்டாஸ், மாயமாவதன் முந்தைய நாள் அவர் பணியாற்றும் பண்ணையில் லிதுவேனியா நாட்டவர்கள் சிலருடன் காணப்பட்டுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் அவர் பணிக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலால் தமது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையில் அவர் மாயமாகியுள்ளார்.

தற்போது அவரை கண்டுபிடித்துள்ள நிலையில், அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பது மட்டுமல்ல, 5 ஆண்டுகளாக உதவ எவரும் இன்றி தனித்து மிகவும் அவதிப்படும் அவருக்கு தேவையான உதவிகள் கிடைக்க பிரித்தானிய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அவரது அச்சத்தை போக்கிய பின்னர், மீட்டு வந்து உளவியல் ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்