யூரோமில்லியன் லொட்டரியில் 57 மில்லியன் பவுண்டுகள் பரிசாக வென்ற ஒருவர் கடந்த 5 மாதங்களாக அந்த தொகையை உரிமைக் கோரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தொகையை அடுத்த நான்கு வாரங்களில் அவர் உரிமைக்கோரவில்லை என்றால், விதிகளின் அடிப்படையில் அந்த தொகையை அவர் இழக்க நேரிடும்.
கடந்த மார்ச் மாதம் அயர்ஷயர், ஸ்கொட்லாந்தில் குறித்த யூரோமில்லியன் லொட்டரி ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட 5 மாதங்களாக பரிசாக வென்ற தொகையை அவர் உரிமைக்கோராமல் உள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி நள்ளிரவு வரை அந்த மர்ம அதிர்ஷ்டசாலிக்கு கால அவகாசம் இருப்பதாகவும்,
அதன் பின்னர் அந்த 57 மில்லியன் பவுண்டுகள் தொகையும் சமூக நலனுக்காக செலவிடப்படும் என விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக இதன் உரிமையாளரை தீவிரமாக தேடி வருவதாக கூறும் தேசிய லொட்டரி நிர்வாகம், இந்த பிரம்மாண்ட தொகையை எவ்வித சிக்கலும் இன்றி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது தங்களது கடமை என்கிறார்கள்.
மிகப்பெரிய ஜாக்பாட் தொகையை உரிமைக்கோர தவறுவது இது முதல் தடவையல்ல, 2012 ஆம் ஆண்டில் 65 மில்லியன் பவுண்டுகள் பரிசு தொகை தொண்டு நிறுவனங்களுக்குச் சென்றது,
அதே நேரத்தில் 2018 முழுவதும் லொட்டரி விளையாட்டுகளில் சுமார் 125 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகை எவராலும் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.