இனி மாஸ்க் அணிய மறுத்தால் கடுமையான அபராதம்: பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மீண்டும் மீண்டும் மாஸ்க் அணிய மறுத்தால் இனி 3,200 பவுண்டுகள் வரை அபராதம் செலுத்தவேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு கடைகள் அல்லது பொது போக்குவரத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் வசூலிக்கப்படுகிறது, இந்த அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்திவிட்டால் 50 பவுண்டுகள் செலுத்தினால் போதும்.

ஆனால், நேற்று இரவு பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இனி மாஸ்க் அணியாமல் இரண்டாவது முறை பிடிபடுவோர் 200 பவுண்டுகள் அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.

ஒவ்வொரு முறை விதியை மீறும்போதும் அபராதம் இரட்டிப்பாகிக்கொண்டே சென்று, இறுதியில் 3,200 பவுண்டுகள் வரை அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.

கொரோனாவின் இரண்டாவது அலை பிரித்தானியாவில் உருவாகுவதைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள கடுமையான விதிகளின் ஒரு பகுதியாக, சட்ட விரோதமாக பார்ட்டிகள் முதலானவற்றிற்காக கூடுவோர், 30 பேருக்கு அதிகமானோர் கூடினால், அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தோர் 10,000 பவுண்டுகள் வரை அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.

விதிகள் சிலவற்றை பிரதமர் கடினமாக்கியுள்ள அதே நேரத்தில், சில நெகிழ்வுகளையும் அறிவித்துள்ளார்.

ஸ்கேட்டிங் முதலான சில விளையாட்டுகள் அனுமதிக்கப்படும் என்றும், கேசினோக்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும், அழகு நிலையங்கள், டாட்டூ ஸ்டுடியோக்கள், ஸ்பாக்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களையும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

30 பேர் வரை பங்குகொள்ளும் திருமண வரவேற்பு முதலான நிகழ்ச்சிகள் சமூக விலகலுடன் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்