லண்டன் வீட்டு மனையில் குப்பை கொட்டிய பிரச்சினை: நேற்று தலைப்புச் செய்தியான விடயத்தில் பரபரப்பு திருப்பம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
5158Shares

லண்டனிலுள்ள தனது வீட்டு மனையில் பக்கத்துவீட்டுக்காரர் குப்பை கொட்டியதாக கூறி, அந்த குப்பையை மீண்டும் அவர் வீட்டிலேயே அள்ளி வீசிய பிரித்தானியர் ஒருவர் நேற்றைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியானார்.

Cliff Hamilton என்பவருக்கு சொந்தமான வீட்டு மனையில், பக்கத்துவீட்டுக்காரரான Gurvinder Singh Luthra (68) என்பவர், தனது வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை கொட்டுவதாக, யாரோ தகவல் கொடுத்துள்ளனர்.

தனது வீட்டு மனைக்கு வந்து பார்த்த Hamilton, அங்கு, பழைய கதவுகள் முதலான மரச்சாமான்கள், பழைய தொலைக்காட்சிப்பெட்டி என ஏராளமான பொருட்கள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

உடனே, அவரும் வேறு சிலருமாக, அந்த பொருட்களை மீண்டும் Luthra வீட்டுக்குள்ளேயே தூக்கி வீச, சத்தம் கேட்டு வந்த Luthraவின் மகன் Armenderpaul (37)ம் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டு சத்தமிட்டுள்ளனர்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் யாரோ பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் என்ன ஏது என்று விசாரிக்காமல் Armenderpaulஐ கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த விடயம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு நேற்று தலைப்புச் செய்தியாகி, யாரோ ஒருவர் தனது வீட்டுக் குப்பையை பக்கத்து வீட்டில் கொட்டியதால், கோபமடைந்த அவர் அந்த குப்பையை அவர்கள் வீட்டிலேயே திரும்பக் கொட்டினார் என்பது போல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இன்று அந்த செய்தியில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யார் குப்பையை தன் நிலத்தில் கொட்டினார்கள் என்பது தெரியாமலே தன் வீட்டில் அந்த குப்பைகளை அள்ளி வீசியதாக Luthra, Hamilton மீது வழக்கு தொடர இருக்கிறார்.

அத்துடன், தன் மகன் Armenderpaulஐ கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதற்காக மேலதிகாரிகளிடம் புகாரும் அளித்துள்ளார் அவர்.

சர்ச்சையை ஏற்படுத்திய அந்த நிலத்தில் முன்பு ஒரு வீடு இருந்தது என்று கூறியுள்ள Luthra, 2013ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அடித்த புயலில், மரம் ஒன்று கேஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் அந்த வீடு எரிந்துபோனதாகவும், அதில் வாழ்ந்துவந்த Suhail Akhtar மற்றும் Dorota Kolasinska என்னும் இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

அதற்குப் பின் ஏழு ஆண்டுகள் அந்த நிலம் வெறுமையாக இருந்தது என்றும், சொல்லப்போனால், அந்த நிலத்தை தாங்கள் பத்திரமாக பார்த்துக்கொண்டதாகவும், ஒருமுறை யாரோ சிலர் ஒரு வேனில் வந்து அங்கு குப்பை கொட்டிச் செல்ல, தாங்கள் பொலிசில் புகாரளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று பத்திரிகைகளில் ஹீரோவாக வலம் வந்த Hamilton, முன் பின் யோசிக்காமல் செய்த செயல்களால் இன்று சிக்கலில் சிக்கி கோமாளியாகியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

அத்துடன் எந்த விசாரணையும் செய்யாமலே Armenderpaulஐ கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற பொலிசாரும் தங்கள் பணியில் கருப்புப் புள்ளி ஒன்றை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்