போதை மருந்து தொடர்பான வழக்கில் சிங்கப்பூர் சிறையில் இருக்கும் லண்டனைச் சேர்ந்த இளைஞருக்கு ஆடை இல்லாமல் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் பிறந்து சிங்கப்பூரில் இசை ஒருங்கிணைப்பு கலைஞராக பணியாற்றி வந்தவர் 31 வயதான Ye Ming Yuen.
இவரே தற்போது சிங்கப்பூர் சிறையில் கொடூர சித்திரவதைக்கு இலக்காகியுள்ளார்.
போதை மருந்து வைத்திருத்தல், விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் மிங்.
வெஸ்ட்மின்ஸ்டர் பாடசாலையின் முன்னாள் மாணவரான மிங், தமது இரண்டாவது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரம்படி தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தங்கள் நாட்டவர் மீது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் முன்வைத்துள்ளது.
ஆனால் பிரித்தானிய அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றே தற்போது வெளியாகும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனையடுத்து மிங் மீதான கொடூர சித்திரவதைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம்.
போதை மருந்து வழக்கில் 2016 ஆம் ஆண்டு மிங் கைது செய்யப்பட்டார். விசாரணையில், மிங் தனது ஆடம்பர வாழ்க்கை முறைக்கு தேவையான நிதி திரட்டுவதற்கும் சூதாட்ட கடன்களை அடைப்பதற்கும் போதை மருந்துகளை விற்கத் தொடங்கினார் என கண்டறியப்பட்டுள்ளது.
ஒருமுறை 15 கிராம் அளவுக்கு மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் கூறி மிங் கைது செய்யப்பட்டு பின்னர் பிணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் போதை மருந்து வழக்கிலேயே கைதான மிங் மீது 12 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, விசாரணையின் முடிவில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 24 முறை ஆடைகள் இன்றி பிரம்படியும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் அவரது சகோதரி எலிசியா தமது சகோதரர் மிங் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மிங் தான் செய்தது தவறு என்றும் தண்டிக்கப்படுவதற்கு தகுதியானவர் என்றும் அவருக்கு தெரியும்.
இது வெவ்வேறு சட்டங்களைக் கொண்ட வேறு நாடு என்பதை நாங்கள் அறிவோம், அந்த சட்டங்களை மதிக்க வேண்டும் என எலிசியா காட்டமாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மிங் செய்த குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை போதுமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.