பிரித்தானியாவில் வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது... என்றாலும் பொலிசார் மீது கடும் கண்டனம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நள்ளிரவில் கத்திக்குத்து சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பர்மிங்காமில் நேற்று நள்ளிரவு கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை தாக்கினார்.

தாக்குதலில் 23 வயது நபர் ஒருவர் உயிரிழக்க, 32 வயது பெண் ஒருவரும் 19 வயது இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்தனர்.

அந்த இளைஞர் தொடர்ந்து கத்தியால் குத்தியதில் மேலும் ஐந்துபேர் காயமடைந்தனர் என்றாலும், அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. பின்னர் CCTV கமெரா காட்சிகளை வெளியிட்டு சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவரைத் தேடி வந்தனர் பொலிசார்.

தற்போது, அந்த சம்பவங்கள் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மீது ஏழு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஆனால், இரண்டு மணி நேரங்களாக அந்த நபர் கத்தியுடன் அராஜக செயல்களில் ஈடுபட்ட நிலையிலும், அத்தனை கமெராக்கள் இருக்கும் நிலையிலும் அந்த நபர் உடனே கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடனடியாக இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அந்த கத்துக்குத்துக்குள்ளான நபர் காப்பாற்றப்பட்டிருக்கலாம், ஏன் அந்த சம்பவம் கவனிக்கப்படவில்லை, எங்கே போனார்கள் பொலிசார் என்கிறார் Khalid Mahmood என்னும் நாடாளுமன்ற உறுப்பினர்.

குற்றவாளி தப்பிச்செல்வதற்கும் ஏராளாமான நேரம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், குற்றவாளி குறித்த தகவல்களை பொலிசார் வெளியிட தாமதித்தாக குறிப்பிடுகிறார் Jay Singh Sohal என்னும் நாடாளுமன்ற உறுப்பினர்.

இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதி ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழும் பகுதி என்பதால், குறிப்பிட்ட நபர் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கருத்து வெளியானது.

பின்னர், கொல்லப்பட்டவர் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என கருதப்படுவதால், இது எந்த நோக்கமுமற்ற ஒரு தாக்குதல் என்று பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்