பேச்சுத்துணைக்கு.... வீட்டு ஜன்னலில் நெஞ்சை உலுக்கும் விளம்பரத்தை பதித்த பிரித்தானிய முதியவர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனைவி இறந்த நிலையில் பேச்சுத்துணைக்கு ஆளின்றி, தனிமையில் தவித்த முதியவர் ஒருவர் தமது வீட்டு ஜன்னலில் நெஞ்சை உலுக்கும் விளம்பரம் ஒன்றை பதித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் க்ளோசெஸ்டர்ஷைர் பகுதியில் குடியிருந்து வருபவர் 75 வயதான டோனி வில்லியம்ஸ்.

இவரே தமக்கு பேச்சுத்துணைக்கு ஒரு நண்பர் தேவை என்ற விளம்பரம் ஒன்றை தமது சாளரத்தின் வெளியே பதித்தவர்.

கடந்த மே மாதம் தமது மனைவியை இழந்துள்ளார் டோனி. அதன் பின்னர் ஒரு நாள் கூட டோனி எவருடனும் பேசவில்லை என்கிறார் அவர்.

பிள்ளைகள் ஏதும் இல்லாத நிலையில், குடும்பத்தினரும் அருகாமையில் குடியிருக்காததால், தனிமையின் சாபத்தை தாம் கடுமையாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பேச்சுத்துணைக்கு ஒரு நண்பர் தேவை என உள்ளூர் பத்திரிகையில் இரண்டு விளம்பரம் செய்துள்ளார் டோனி.

ஆனால், எந்த பலனும் அதனால் இல்லை என கூறும் டோனி, தொடர்ந்து முகவரி அட்டை ஒன்றை தயாரித்து, தாம் வெலியே செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுக்கு அளித்துள்ளார்.

தம்முடன் ஒன்றாக இருந்து இசையை ரசிக்கவும், தோட்டத்தில் அமர்ந்து கதைகள் பேசவும் ஒரு நண்பர் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆனால் அதனால் கூட எந்த பலனும் இல்லை என்றே தமது வருத்தத்தை அப்திவு செய்துள்ளார் டோனி.

இதனையடுத்தே தமது குடியிருப்பின் சாளரத்தில் விளம்பரம் ஒன்றை பதிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் டோனி.

தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், இதுவே தமது கடைசி முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது குடியிருப்பின் அருகாமையில் பெரிதாக எவரும் கடந்து போவதில்லை என்றாலும், ஒரு நம்பிக்கை இருக்கிறது என்றே கூறியுள்ளார் டோனி.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்