பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் விதிமுறைகளை மீறி, நடந்த திருமண விருந்திற்கு 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களாகவே பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது பரவலை பார்க்க முடிகிறது என்று அரசு கூறியிருந்தது.
இதனால் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதில், முக்கியமாக கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம் கடுமையாக விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி Stafford-ல் இருக்கும் பூங்கா ஒன்றில் திருமணத்திற்கு பிந்தைய விருந்து ஒன்று பிரம்மாண்டமாக நடத்தப்படுவதாகவும், இதில் ஏராளமான விருந்தினர்கள் இருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து பார்த்த போது, கொரோனா விதிமுறைகளை மீறி பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிசார் கொரோனா விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியை நடத்திய அமைப்புக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர்.

நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள், பொலிசார் வந்து அறிவுரைத்த பின் சென்றுவிட்டதால், அவர்கள் யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து West Mercia பொலிஸ் அதிகாரி Paul Moxley கூறுகையில், நாட்டில் பெரும்பான்மையானோர் கொரோனாவிற்கான புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வருவதுடன், பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து கட்டுப்பாடு விதிமுறைகளை புறக்கணித்து வருவது ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம், அதன் காரணமாகவே இந்த திருமண விருந்தை நடத்திய அமைப்புக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளதாக கூறினார்.
பூங்காவில் நந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 120 பேர் கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது. நாங்கள் அனைவரும் விருந்தினர்களுடன் பேசியபோது அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறியதால், விருந்தினர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.
எனவே, கொரோனா வைரஸ் விதிகளை மீறும் எவருக்கும் காவல்துறை வலுவான அணுகுமுறையை எடுத்து வருவதாக தெரிவித்து கொள்கிறேன், வைரஸ் பரவலை தடுப்பதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்காகவும், நாங்கள் ஒரு வலுவான அமலாக்க அணுகுமுறையை எடுத்து வருகிறோம்.
இதனால் மக்கள் விதிமுறைகளை மீறுகிறார்கள் என்று தெரிந்தால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், West Mercia-வில் கொரோனா விதிமுறை மீறல்கள் குறித்து எவரும் நடந்து கொண்டால், West Merciaஇணையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.