பிரித்தானியாவில் கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான சுகாதாரத்துறை பணியாளர்களை கொரோனாவால் மகாராணி எலிசபெத் கவுரவிக்க உள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்றளவிலும் குறைந்தபாடில்லை. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலுக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக பிரித்தானியாவில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக, சுகாதாரத் துறையினர் முழுவீச்சில் கொரோனா தடுப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் களப்பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், நிதி திரட்டுபவர்கள், மற்றும் தன்னார்வலர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை எலிசபெத் ராணி கவுரவிக்க உள்ளார்.
எலிசபெத் ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பாக சமூக சேவை செய்பவர்களுக்கு அரசப் பதக்கம் அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்பவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ராணியால் கவுரவிக்கப்படுவோரின் பெயர்கள் கொண்ட பட்டியலை ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நபர்களுக்கான பரிந்துரைகளைச் சேர்க்கும் பொருட்டு, பட்டியல் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது அந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெறும் நூற்றுக்கணக்கான சுகாதார பணியாளர்களை ராணி எலிசபெத் கவுரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.