இங்கிலாந்தில் பாரமரிப்பு சேவை திட்டம் கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு தாக்குப்பிடிக்காது! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

சர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பானது ஏறத்தாழ 4 கோடி மக்களை பாதித்துள்ள நிலையில், இங்கிலாந்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தினை வலுப்படுத்த கோரிக்கைகள் வலிமையடைந்துள்ளன.

தற்போதைய சூழலில் இந்த திட்டமானது கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு தாக்கு பிடிக்காது என்றும், எனவே உடையும் நிலையில் உள்ள இதனை உடனடியாக சரிசெய்ய தொழிலாளர்களுக்கான சிறந்த விதிமுறைகளுடன் சமூக கவனிப்புக்கான புதிய ஒப்பந்தத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று பிரத்தானியாவின் பராமரிப்பு தர ஆணையம் (CQC) வலியுறுத்தியுள்ளது.

பராமரிப்புத் துறையில் தற்போது சீர்திருத்தம் மிக அவசியமான ஒன்று என ஆணையத்தின் தலைமை நிர்வாகி இயன் ட்ரென்ஹோம் தெரிவித்துள்ளார்.

“போரிஸ் ஜான்சன் ஜூலை 2019 இல் பிரதமராக தனது முதல் உரையில், சமூகப் பாதுகாப்பில் உள்ள நெருக்கடியை நாங்கள் சரிசெய்வோம் எனக்கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை எந்த சீர்திருத்தமும் முன்மொழியப்படவில்லை, மேலும் இங்கிலாந்தின் பராமரிப்பு இல்லங்களில் கோவிட் -19 தொற்றுக்கு இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.” என ட்ரென்ஹோம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக CQC, மருத்துவமனைகள், பொது நோயாளிகள் மற்றும் பராமரிப்பு சேவைகள் குறித்த தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதில், தொற்றுநோய்க்கு முன்னர் மனநலம், மகப்பேறு சேவைகள் மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான கடுமையான சிக்கல்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ஆய்வுகளில், 41% மகப்பேறு சேவைகளுக்கு பாதுகாப்பிற்கான முன்னேற்றம் தேவை என்று கண்டறியப்பட்டது.

அவசர சிகிச்சை சேவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை முன்னேற்றம் அல்லது போதுமானதாக இல்லை என மதிப்பிடப்பட்டுள்ளன. கற்றல் குறைபாடுகள் / மன இறுக்கம் கொண்டவர்களுக்கான வார்டுகளில் பதின்மூன்று சதவிகிதம் போதிய வசதிகளை கொண்டிருக்கவில்லை. இது முந்தைய ஆண்டிலிருந்த நிலைமையை விட மோசமானதாகும்.

வரவிருக்கும் குளிர்காலத்திற்கு முன்னதாக சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதற்கு தேவையான கூடுதல் நிதியை கவுன்சில்களுக்கு அரசு அவசரமாக வழங்க வேண்டும், அதே நேரத்தில் சமூகப் பாதுகாப்பின் எதிர்கால சீர்திருத்தத்திற்கான அடிப்படையாகவும் இதைப் பயன்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகள் இங்கிலாந்தில் மேலெழுந்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்