உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை கடந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்தில் தொற்று பரவலின் இரண்டாவது அலை பெருத்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தாததின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இறப்பை தடுக்க முடியாது என அந்நாட்டின் அரசு அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக அமல்படுத்தபடுத்தாத காரணத்தினால் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்றும், இது மிகப்பெரிய உயிரிழப்புகளை நோக்கி நம்மை நகர்த்தும் என்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & டிராபிகல் மெடிசின் துறை பேராசிரியர் ஜான் எட்மண்ட்ஸ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் கூறியுள்ளார்.
"நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தால், பல்லாயிரக்கணக்கானவர்களில் இறப்புகளைக் கணக்கிடாமல் இந்த அலையிலிருந்து நாம் வெளியே வர வழி இல்லை" என்று தொற்றுநோயியல் நிபுணரான எட்மண்ட்ஸ் பொது அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் கூட்டு விசாரணையிலும், சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு குழு கூட்டத்திலும் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாம் இப்போது உயிரிழப்புகளுக்கு மிக நெருக்கத்தில் உள்ளோம், அல்லது நெருக்கத்தை கடந்து உயிரிழப்புகளுக்கு நடுவில் உள்ளோம். இந்த விடயத்தினை அடுத்த வாரத்தில் நம்மால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.” என எட்மண்ட்ஸ் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8 லட்சத்தினை நெருங்கி வருகின்றது. இதுவரை 44,248 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.