எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களுக்கும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி அளித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவிக்கையில், முதல் கொரோனா நோயாளிகளுக்கு டிசம்பரில் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க நிறுவனமான பைசரின் தடுப்பூசியை பிரித்தானியாவில் பயன்படுத்த அரசாங்கம் உரிய நிர்வாகத்தினரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மாட் ஹான்ஹாக் உறுதிப்படுத்தியுள்ளார்.
பைசர் நிறுவனம் ஏற்கனவே கட்டுப்பாட்டாளருக்கு தரவை சமர்ப்பிக்கத் தொடங்கியிருப்பதாகவும், மேலும் அதன் முழு தரவையும் வரும் நாட்களில் சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய நகர்வாக குறிப்பிட்டுள்ள ஹான்ஹாக்,
தடுப்பூசி ஒன்றை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் வேகம் அது தயாரிக்கக்கூடிய நிறுவனத்தின் வேகத்தைப் பொறுத்தது என்றார்.
இந்த விவகாரத்தில் நாம் சரியான திசையில் செல்கிறோம், ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது எனவும் ஹான்ஹாக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, 5 மாதங்களுக்குள் 44 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், டிசம்பர் மாத துவக்கத்தில் பிரித்தானியாவில் தடுப்பூசி வழங்கத் தொடங்குவார்கள் எனவும்,
பிப்ரவரி பிற்பகுதிக்குள் அதிக சிக்கலில் இருக்கும் 50 முதல் 65 வயதுடைய 20 மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி வழங்கி முடிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும், ஜனவரி கடைசி தொடங்கி 18 வயது முதல் 50 வரையான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி 5 மாதங்களில் சுமார் 88.5 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை மக்களுக்கு அளிக்கவும், இது இங்கிலாந்தில் 44 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதுகாக்க போதுமானது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.