இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிவேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ், வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய சுகாதார செயலர் Matt Hancock, இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது வேகமாக பரவுவதாகவும் வெளியிட்ட தகவல் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், அந்த புதிய வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்ல, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோக, பிரித்தானியாவுக்கு வெளியே, டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் அதே வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் ஏற்கனவே பரவிக்கொண்டிருக்கும் வைரஸைவிட வேகமாக பரவுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய கொரோனா வைரஸ் ஸ்பெயினிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த புதிய வைரஸின் அமைப்பு வித்தியாசமாக உள்ளதால், மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பால் அதை அடையாளம் காணுவது கடினம் என கருதப்படுகிறது.
எனவே, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம் என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி!