இன்னும் சில மணி நேரம்... பிரித்தானிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பம்: பரபரப்பாகும் பிரித்தானியா!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
3181Shares

பிரெக்சிட் முழுமையாக நிறைவேற இன்னமும் சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், பிரித்தானியா அதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியமல்லாத ஒரு நாடாக மாறியிருக்கும்.

1973ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிரித்தானியா, 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது. அதைத்தான் பிரெக்சிட் என்று அழைக்கிறோம்.

2016ஆம் ஆண்டு டேவிட் கேமரான் பிரித்தானிய பிரதமராக இருக்கும்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 51.9 சதவிகிதம் மக்கள் வாக்களித்தார்கள்.

அதைத் தொடர்ந்து தெரஸா மே பிரதமரானார், நான்கு ஆண்டுகள் பேச்சு வார்த்தைகள், இரண்டு பொதுத்தேர்தல்கள், இரண்டு புதிய பிரதமர்கள்... 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.

மாற்றக்காலம் அறிவிக்கப்பட, வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட, டிசம்பர் 31ஆம் திகதி மாற்றக்காலம் முடிவடையும்போது பிரித்தானியா முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துவிடும்.

மாற்றக்காலம் நாளை இரவு 11 மணிக்கு முடிவடைவதால், அந்த ஒப்பந்தம் இன்று நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படுகிறது.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த மாற்றுக்கருத்துமின்றி அதற்கு ஆதரவளிக்க இருப்பதாக அறிவித்துவிட்டதால் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதில் பிரச்சினை இருக்காது.

கிறிஸ்துமஸ் விடுமுறையிலிருந்து அழைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர் இன்று ஒப்பந்தத்தை அலசி ஆராய இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் விண்ட்சர் மாளிகையில் தயாராக காத்திருக்கும் பிரித்தானிய மகாராணியார் இன்று நள்ளிரவுக்கு முன் அந்த ஒப்பந்தத்திற்கு முறைப்படி ராஜரீக ஒப்புதல் அளிப்பார்.

அதேபோல், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் அதே நேரத்தில், பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள்.

இதற்கிடையில், ஏற்கனவே 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தூதர்களும் மனமொத்த ஆதரவை ஒப்பந்ததுக்கு தெரிவித்துவிட்டதுடன், உறுப்பு நாடுகள் எழுத்துப்பூர்வமாகவும் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்துவிட்டன.

ஆக, இன்னும் சில மணி நேரத்தில் பிரித்தானிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் துவங்க இருக்கிறது...

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்