பிரித்தானியாவில் கடைசி நேரத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து: கடும் குழப்பத்தில் மக்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
998Shares

பிரித்தானியாவில் பள்ளிகளை திறக்கவேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படாது என ஆசிரியர் யூனியன்கள் கடைசி நேரத்தில் தெரிவித்துள்ளதால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு 12 மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென பள்ளிகள் திறக்கப்படாது என சமூக ஊடகங்கள் மூலமாகவும், அக்கம் பக்கத்தவர்கள் வாயிலாகவும் பெற்றோர்களுக்கு கிடைத்த செய்தியால் பிரித்தானியாவில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன், பள்ளிகள் பாதுகாப்பானவை என வலியுறுத்தியதையும் மீறி, இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதை நிறுத்திவைப்பது என்றும், ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்வரை பள்ளிகளை திறப்பதில்லை என்றும் ஆசிரியர் யூனியன்கள் தெரிவித்துள்ளன.

லண்டனிலுள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்பட்டுள்ளதுடன், எசெக்ஸ், கென்ட், கிழக்கு சசெக்ஸ், பக்கிங்காம்ஷையர் மற்றும் ஹெர்ட்போர்ட்ஷையர் முதலான 19 கொரோனா மையப்புள்ளிகளாக மாறியுள்ள இடங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால், சர்ரே, Gloucestershire, நியூகேஸில், நார்போல்க், லிவர்பூல், County Durham, மேற்கு சசெக்ஸ், ஷெஃபீல்ட், வூல்வராம்ப்டன், லீட்ஸ் மற்றும் லங்காஷையர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளை திறக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையிலும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், அனைத்து இடங்களிலும் உள்ள மாணவ மாணவிகளும் கட்டாயம் பள்ளிக்கு திரும்பவேண்டும் என நேற்று வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை என ஆசிரியர் யூனியன்கள் கூறிவிட்டன.

இதற்கிடையில், ஒருபக்கம் படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறார்கள், பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் சோர்வடைந்துள்ளார்கள்.

இன்னொரு பக்கம், வெறும் ஒன்லைன் கல்வி போதுமானதல்ல என பெற்றோர் பலர் கருதுகிறார்கள்.

இதுபோக, பெற்றோரில் ஒருவர் மட்டுமே பிள்ளைகளை வளர்க்கும் நிலைமையிலுள்ள பெற்றோர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமுடியாததால், தாங்களும் வேலைக்கு செல்லமுடியாத ஒரு சூழலும், அப்படி வேலைக்கு செல்ல இயலாததால் வருவாய் பாதிக்கப்பட்டு குடும்பத்தை கவனித்துக்கொள்ள இயலாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்