முடியாது! அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையை நிராகரித்த பிரித்தானியா நீதிமன்றம்: நீதிபதி கூறிய காரணம்

Report Print Basu in பிரித்தானியா
6361Shares

உளவு குற்றச்சாட்டில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை பிரித்தானியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே.

இந்த விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதற்கிடையே சுவீடன் நாட்டில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை கூறினார்கள்.

இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் கடந்த 2012-ம் ஆண்டு அவர், லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு திடீரென வாபஸ் பெற்றதால் 2019 ஏப்ரல் மாதம் அவர் லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் 50 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லண்டனின் புறநகரில் உள்ள பெல்மர்ஷ் சிறையில் அசாஞ்சே அடைக்கப்பட்டுள்ளார்.

இராணுவ ரகசியங்கள் ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ஒப்படைப்பு கோரிக்கை குறித்த பிரித்தானியாவின் முடிவக்காக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறையில் அசாங்சே காத்திருக்கிறார்.

இந்நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை நிராகரித்து இங்கிலாந்து மாவட்ட நீதிபதி Vanessa Baraitser தீர்ப்பளித்துள்ளார்.

அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் அசாஞ்சின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய Baraitser, அவர் தற்கொலை செய்து கொள்ளும் அதிக ஆபத்து இருப்பதாக அஞ்சுவதால் அமெரிக்காவின் கோரிக்கையை எதிர்த்து தீர்ப்பளித்ததாக கூறினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் பதிவுகள், இரகசிய வெளியுறவு தொடர்புகள் போன்ற இரகசிய ஆவணங்களைத் திருட பாதுகாப்புத் துறை வலையமைப்பில் கணினி ஊடுருவலுக்கு அமெரிக்க ஆர்வலர் Chelsea Manning உடன் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் அசாஞ்சேவை விசாரிக்க அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக 1917 ஆம் ஆண்டின் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் மொத்தம் 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே எதிர்கொள்கிறார்.

எல்லா குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அசாஞ்சே 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்