தூக்கத்திலேயே பிரிந்த பிரித்தானியரின் உயிர்... வயிற்றில் பிரச்சனை என கருதிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1088Shares

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தமக்கு கொரோனா பாதித்துள்ளது அறியாமல், தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ள சம்பவம் அவர் குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியை சேர்ந்த 60 வயதான டேவிட் ஹேமான் என்பவரே கொரோனா பாதிக்கப்பட்டு தூக்கத்திலேயே மரணமடைந்தவர்.

கடந்த நவம்பர் மாதம் டேவிட் திடீரென்று நோய்வாய்ப்பட்டுள்ளார். அறிகுறிகளை வைத்து அவர் Stomach flu என பரவலாக அறியப்படும் வயிற்றுப் பிரச்சனை என்றே கருதியுள்ளார்.

அதனால் சிகிச்சை எடுத்துக் கொள்ளவோ பரிசோதனைக்கு உட்படவோ அவர் முயற்சிக்கவில்லை.

டேவிட்டுக்கு மட்டுமல்ல, இதே பிரச்சனை அவரது மனைவிக்கும் இருந்துள்ளது. இந்த நிலையிலேயே டேவிட் தூக்கத்திலேயே மரணமடைந்துள்ளார்.

ஆனால் உடற்கூராய்வில் டேவிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மரண காரணமும் அதுவே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய டேவிட்டின் மகள் 37 வயதான Michelle, தமது பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இருந்தது இல்லை என குறிப்பிட்டுள்ளதுடன், முக்கியமாக இருவருக்கும் இருமல் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.

அருகாமையில் படுத்திருந்த கணவன் காலையில் சடலமாக காணப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக டேவிட்டின் மனைவியை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

அங்கே அவர் இரண்டு வார காலம் சிகிச்சை எடுத்துள்ளார்.

மார்ச் மாதத்தில் இருந்தே தமது பெற்றோர் இருவரும் சமூக இடைவெளி மற்றும் கொரோனா விதிகளை கடைப்பிடித்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வந்துள்ளதாக கூறும் Michelle, தமது மகப்பேறு வேளையில் மட்டுமே தமது தாயார் வீட்டை விட்டு வெளியே வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தமது 4-வது பிள்ளையை பெற்றெடுத்து 5 வாரங்களுக்கு பிறகு, தமது தந்தை டேவிட் இறந்ததாகவும், தமது மகள் கொஞ்ச நாளேனும் தாத்தாவின் அரவணைப்பில் இருக்க வாய்ப்புப்பெற்றதாக Michelle கண்கலங்கியுள்ளார்.

தமது தந்தையின் மரணத்தை அடுத்து, கொரோனா மிகவும் வயதானவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள Michelle, உண்மையில் நாம் கொரோனா தொற்று தொடர்பில் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்