சமீபத்திய ஆய்வு ஒன்றில், 72 சதவிகித கருப்பின பிரித்தானியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாரில்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்களில் 42 சதவிகிதம் பேரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்கள்.
இத்தனைக்கும் கொரோனாவால் கருப்பினத்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆய்வு ஒன்றிலிருந்து, கொரோனாவின் முதல் அலையின்போது கொரோனாவால் அதிக அளவில் உயிரிழந்தவர்களில் கரீபிய கருப்பினத்தவர்கள் 2.5 மடங்கு அதிகம், 4.3 மடங்கு அதிகம் உயிரிழந்தவர்கள் ஆப்பிரிக்க கருப்பினத்தவர்கள், மற்ற கருப்பினத்தவர் நாடுகளைச் சேர்ந்தவர்களில் உயிரிழந்தவர்கள் 7.3 மடங்கு அதிகம்.
அதாவது கொரோனாவுக்கு பலியானவர்களில் மற்ற இனத்தவர்களை விட கருப்பினத்தவர்கள் அதிகம்.
இருந்தும் கருப்பினத்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அவ்வளவு தயங்குவது ஏன்? எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியரான Sir Geoff Palmer, அதற்கு ஒரு காரணத்தைக் முன்வைக்கிறார்.
தொலைக்காட்சியை ஆன் செய்தால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என பிரச்சாரம் செய்யும் அமைச்சர்களானாலும் சரி, அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அறிவியலாலர்களானாலும் சரி, அவ்வளவு பேரும் வெள்ளை இனத்தவர்கள். ஒருவர் கூட கருப்பினத்தவர் இல்லை!
ஆக, இப்போதிருக்கும் சூழலில், கருப்பினத்தவர்களான மருத்துவர்கள் மேடைகளில் தோன்றி, தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என வலியுறுத்தினால் மட்டுமே கருப்பினத்தவர் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்படும் என்கிறார் Palmer.
கொஞ்சம், பிரித்தானிய அமைச்சர்களையும், அறிவியலாளர்களையும், மருத்துவர்களையும் மனதில் ரீவைண்ட் செய்து பார்த்தால், Palmer சொல்வது உண்மைதான் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில், கொரோனா தடுப்பூசியில் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் பொருட்கள் இருப்பதால், அவை மனித DNAவில் மாற்றம் செய்துவிடும் என்ற போலியான செய்தி பரவிவருகிறதாம்.
ஆக, கருப்பின பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி குறித்து விளக்க முன்வருவது பயனளிக்கலாம் என கருதுகிறார் Palmer. அதேபோல், கருப்பின மருத்துவர்களும் தொலைக்காட்சியில் ஆலோசனைகள் அளிக்கவேண்டும் என்கிறார் அவர்.