அதுவரை கண்டிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும்: பிரித்தானியாவின் பொது சுகாதார அதிகாரி எச்சரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கக்கூடும் என்று முக்கிய பொது சுகாதார அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், கொரோனா பரவுதல் தொடர்பில் போதுமான அளவு தரவுகள் வெளிவராததால் சாதாரண வாழ்க்கை திரும்புவது கடினம் என்றே டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார்.

மதுபான விடுதிகள் திறந்திருப்பதும், மக்கள் வெளிநாடுகளில் விடுமுறைகளுக்கு அனுமதிக்கப்படுவதாலும், கடந்த ஆண்டு இதே வேளையில் இருந்ததை விட இந்த கோடைகாலத்தில் விதிகள் கடுமையானதாக இருப்பதாக சொல்வது கடினம் என்றார் அவர்.

வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் இருவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளிகளுக்கு தங்களை அறியாமலே செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றார் டாக்டர் ஹாப்கின்ஸ்.

இதனாலையே, நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, அல்லது குறைந்தது பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்வரை இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கும் என்றே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இங்கிலாந்து பெரியவர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசாங்கம் முன்பு கூறியது.

மட்டுமின்றி, அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும், மே மாதத்திற்குள் அனைவருக்கும் முதல் தடுப்பூசி மருந்து கிடைத்திருக்கும் என்றும் நம்பிக்கையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகிய்யுள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பெருந்தொற்றால் தீவிரமாக நோய்வாய்ப்படுவதைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆனால் கொரோனா பரவல் எந்த அளவுக்கு கட்டுக்குள் இருக்கிறது என்பது தொடர்பில் போதுமான தரவுகள் இல்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியானது வைரஸின் பரவலை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது.

ஆனால் இது இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஜோன்சனை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

உண்மையில் இது ஆபத்தான போக்கு என குறிப்பிட்ட டாக்டர் ஹாப்கின்ஸ், சமூகத்தில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகிறதென்றால், ஒவ்வொரு சமூக தொடர்புகளும் தொற்றுநோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்